நீர்கொழும்பு சிறைச்சாலையில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு துன்பப்பட்டு வருகின்றனர். இலங்கை அரசின் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டே இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறும்போது அல்லது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படும்போது குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சட்டத்தின் பிடியில் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
ஆனால் ரி.எம்.வி.பி தலைவர் கருணாவிற்கு மட்டும் இலங்கையின் சட்டம் செங்கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறது. குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் வரவேற்கப்பட்ட அவர் பத்திரமாக இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். எந்தவிதமான ஒரு சட்டப் பிரச்சினையும் இல்லாமலேயே.
புலிகளிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட கருணா வடக்கு கிழக்கு எனும் பிரதேசவாதத்தை முன்வைத்து அரசியல் செய்ய முயற்சித்தபோது, அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் பலவீனப்படுத்தப்பட்டார்.
பிள்ளையான் எனும் முன்பு கேள்விப்பட்டிராத அரசியல் பிரிவு புலி உறுப்பினரை வளர்த்தெடுக்க விரும்பிய அரசினதும் படை புலனாய்வு அதிகாரிகளினதும் நடவடிக்கைகளால் கருணாவின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டன.
திருகோணமலையை பிள்ளையானுக்கு தாரை வார்த்துக் கொடுத்த அரசு, காலப்போக்கில் மட்டக்களப்பு அம்பாறை பகுதிகளிலும் கருணாவுக்கு விசுவாசமானவர்களை விரட்டியடிக்கும் நிலையை பிள்ளையானுக்கு ஏற்படுத்தி கொடுத்தனர்.
இந்த ஒரு நிலையிலேயே, கருணா தனது குடும்பத்தை லண்டனுக்கு களவாக செல்லும் நடவடிக்கைகளையும் அரசே மறுபுறத்தில் ஒழுங்கு செய்து கொடுத்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், நாடு திரும்பியுள்ள கருணா என்ன செய்யப்போகிறார்? அவரால் என்ன செய்ய முடியும்? என்ற கேள்விகள் சகல தரப்பினரிடையேயும் எழுந்துள்ளன. கருணாவை பொறுத்தவரையிலும், அவர் புலிகளின் பிரதான இலக்கு என்பதில் வேறுபட்ட கருத்துக்கு இடமில்லை.
இந்நிலையில் வெளிநாடுகளில் வாழ்வது என்பது அவருக்கு பிரச்சினையான விடயமே. கருணாவின் இருப்பிடத்தைக் கண்டு பிடிப்பதோ, அவரைப் பின்தொடர்வதோ புலிகளின் உளவுப்பிரிவுக்கு முடியாத ஒரு காரியமாக இருக்காது. பிரிட்டன் அரசின் சிறையில் சந்தித்த கொடூரமான அனுபவங்கள், புலம் பெயர்ந்த தமிழர்களின் மத்தியில் கருணாவிற்கு இருக்கும் மரியாதையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தன.
இலங்கை அரசின் பாதுகாப்பில் வாழ்வது மட்டுமே கருணாவிற்கு சற்று சிறப்பான விடயமாக இருக்கும். தமது கட்சிக்குள் பிரச்சினைகள் உண்டு என்றும் அவை பேசித் தீர்க்கப்பட வேண்டியது என்றும் கருணா கூறியது, பிள்ளையானுக்கும் தனக்கும் இடையே உள்ள அதிகாரப்பிரச்சினை பற்றியதே.
கருணா லண்டனுக்கு சென்றபோது பிரச்சினையை தீர்த்துவிட்டு செல்லவில்லை. திரும்பி வரும்போதும் பிரச்சினையை தீர்த்துவிட்டு வரவில்லை. எல்லா விடயங்களுமே அவரை மீறியே நடந்து வருகின்றது.
பிள்ளையானை பொறுத்தவரையிலும் ரி.எம்.வி.பியின் பிரதித் தலைவர் என்று தன்னைச் சொல்லிக் கொண்டாலும் கட்சியின் முழு அதிகாரங்களும் அவரிடமே உள்ளது. கட்சியின் நிர்வாகிகளும் அவருக்கு விசுவாசமானவர்களாகவே பெருமளவில் உள்ளனர். மூழ்கும் கப்பலில் அரசியல் பயணம் செய்ய எந்த அரசியல் கட்சி உறுப்பினர்களும் விரும்ப மாட்டார்கள். எனவே கட்சி உறுப்பினர்களிடையே தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் தக்கவைத்துக் கொள்வது பிள்ளையானுக்கு கடினமான விடயமல்ல.
இலங்கை அரசின் செல்லப் பிள்ளையாக உள்ள பிள்ளையான், சந்திரிகாவை கையாள்வதில் மகிந்த சகோதரர்கள் கடைப்பிடிக்கும் அணுகுமுறையைத்தான் கருணா விடயத்திலும் கடைப்பிடிக்க விரும்புவர். அவருக்கு தற்போதைக்கு அதுவே சிறந்த வழியாகவும் இருக்கும். குழந்தைப் பராயத்தில் உள்ள தனது கட்சியை தனது கைக்குள் வைத்து வளர்த்தெடுக்க விரும்பும் பிள்ளையான் தற்போதைக்கு கருணாவிற்கு பாரிய அச்சுறுத்தல் எதையும் மேற்கொள்ள மாட்டார் என நம்பலாம்.
புலிகளையும், புலிகளை ஆதரிக்கும் தமிழர்களையும் பொறுத்தவரையிலும், கருணாவின் வருகை நிச்சயமாக எதுவித பாதிப்பையும் கொடுக்கப் போவதில்லை. படையினர் முன்னேறிச் செல்லும் வடபகுதி கருணாவிற்கு பரிச்சயமான இடமல்ல. அத்துடன் கருணாவைவிட பிரதேசம் பற்றி போதியளவு அறிவும் அனுபவமும் கொண்டவர்கள் புலிகள் தரப்பிலும், படைத்தரப்பிலும் உள்ளனர்.
அதேநேரத்தில் கருணாவின் வருகையால் ரி.எம்.வி.பில் ஏற்படவுள்ள புகைச்சலும் போட்டியும், அதிகார இழுபறிகளும் அக்கட்சியை பலவீனப்படுத்துமானால் அதை புலிகள் இயக்கமும், அதன் ஆதரவு சக்திகளும் கருணாவின் எதிர்ப்பாளர்களும் வெகுவாக ரசிப்பார்கள் என்பது மட்டும் உறுதி.
இவற்றையெல்லாம் மீறி, இலங்கை அரசு, அதாவது யுத்த முன்னெடுப்புக்களை நம்பி ஆட்சி நடாத்திவரும் அரசு, கருணாவை எவ்வாறு கையாளப்போகிறது என்பதை அறிய சகல தரப்பினரும் ஆர்வமாக உள்ளார்கள் போல் தெரிகிறது.
கருணாமீது போர்க்கால குற்றங்களின் அடிப்படையில் வழக்கு தொடர சர்வதேச மனித உரிமைகள் சம்பந்தமாக அமைப்புக்கள் பலவும் ஆர்வமாக இருந்ததுடன் பிரித்தானிய அரசுக்கும் அழுத்தங்களை கொடுத்திருந்தன. ஆனாலும் பிரிட்டன் கருணாவை நாடு கடத்துவதில் மட்டுமே குறியாக இருந்தது.
தற்போது மனித உரிமைகள் அமைப்புக்கள் இலங்கை அரசின்மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளன. இந்த அழுத்தங்கள் கருணா இலங்கை அரசின் பாதுகாப்பில் உள்ளவரை தொடர்ந்தும் இருக்கத்தான் போகிறது. கடந்த காலங்களைப் போலவே இந்த விடயத்திலும் மகிந்த அரசு சர்வதேச அமைப்புக்களின் அழுத்தங்களை உதாசீனப்படுத்தியே நடக்கும்.
அதேநேரத்தில் 1990ம் ஆண்டின் நடுப்பகுதியில், நிராயுதபாணிகளான நிலையில் கிழக்கு மாகாணத்தில் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட பொலீஸ் நிலையங்களில் படுகொலை செய்யப்பட்ட 700ற்கும் அதிகமான பொலீஸ் உத்தியோகத்தர் மரணங்கள் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ள மகிந்த அரசு நீண்ட காலத்தின் பின்பு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது.
கொல்லப்பட்ட பொலீசாரின் உறவினரதும், கடும்போக்கு சிங்கள அமைப்புக்களினதும் வேண்டுகோளின் பேரில் இவ்ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பதாக அரசு கூறினாலும், இது ஓர் காலத்தின் தேவைக்கேற்ற நடவடிக்கையாகவே அரசு கருதுகிறது.
பொலீசார் படுகொலை செய்யப்பட்ட காலத்தில் புலிகளின் மட்டக்களப்பு, அம்பாறை பிராந்திய தலைவராக கருணாவே விளங்கினார் என்பதும் இன்றைய ரி.எம்.வி.பி உறுப்பினர்கள் பலர் அன்று கருணாவின் உத்தரவில் வேலை செய்தவர்கள் என்பதும் அரசுக்குத் தெரியும். ரி.எம்.வி.பிக்கும் தெரியும்.
எனவே அரசின் ஆணைக்குழு நியமனம் ஒருவகையில் கருணா பிள்ளையான் போன்றவர்களிற்கு போடப்பட்டுள்ள கடிவாளம்தான்.
தனது அதிகாரத்தை ரி.எம்.வி.பியின் மீது, நிரந்தரமாக செலுத்துவதற்கு ஏதுவாக பிள்ளையானுக்கு சமாந்தரமாக கருணாவை வரவேற்று பாதுகாக்கும் மகிந்த அரசும், படைத்தலைமையும் பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்தி கடந்த காலங்களில் ஏனைய அரசு சார்ந்த தமிழ் அமைப்புக்களை பலவீனப்படுத்தியது போல, ரி.எம்.வி.பியையும் பலவீனமான நிலையில் வைத்திருக்கவே முயற்சிக்கும்.
பிள்ளையானோ அல்லது கருணாவோ தனது கட்டுப்பாட்டை மீறி செயற்பட முயற்சிப்பார்கள் என்று சந்தேகம் வந்தாலே போதும் ஜனாதிபதி ஆணைக்குழு அடிக்கடி கூடி விசாரணைகளை மேற்கொள்ளத் தொடங்கும்.
மகிந்த அரசிற்கு ஆதரவாக பிள்ளையானும் கருணாவும் செயற்படும் வரையிலும் இவர்கள் இருவருக்கும் எந்தவித நெருக்கடிகளும் அரசு தரப்பில் இருந்து எழப்போவதில்லை. அவர்களும் உணர்ச்சிவசப்பட்டு எதையும் செய்ய முற்பட மாட்டார்கள் எனவும் நம்பலாம்.
Tuesday, 15 July 2008
கருணாவிற்கு அரசு விரித்த முட்கம்பளம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment