Tuesday, 15 July 2008

ஆயுதங்களைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தைகளுக்கு வரத் தயாரில்லை என்கிறார் --இளந்திரையன்

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டாலே அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதிபடக் கூறியுள்ளபோதும்,

பேச்சுவார்த்தைக்குச் செல்வதற்கு முன்னர் ஆயுதங்களைக் கைவிட முடியாது என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருக்கும் நிபந்தனையானது யதார்த்தம் அற்றது எனத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன்,


உடனடியாக சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்காமல் மேலும் காலத்தை இழுத்தடிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இவ்வாறான நிபந்தனையை முன்வைத்திருப்பதாக கூறியுள்ளார் என கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“நாங்கள் எப்பொழுதும் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகவே உள்ளோம். எமது நிலைப்பாட்டை நோர்வே அனுசரணையாளர்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.

போர்நிறுத்த உடன்படிக்கை தற்பொழுது நடைமுறையில் இல்லையென்பதால், அதற்கமைய நாங்கள் ஆயுதங்களைக் கைவிடமாட்டோம்.


எம்முடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தவிரும்பினால் நாங்கள் எந்த நிலையில் இருக்கின்றோமோ அதே நிலையிலேயே பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும்.

6 வருட காலங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொண்டவர்கள் நாங்கள் அல்ல.

எமக்கு அதில் எந்தவிதமான பிரச்சினையும் இருக்கவில்லை” என இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இன்றே தயாராக இருப்பதாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் கூறியிருந்தார்.

“பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க நான் தயார். ஆனால், அவர்கள் தமது ஆயுதங்களைக் கைவிடவேண்டும்.

ஏனெனில், எப்பொழுது அவர்கள் இராணுவ ரீதியாகப் பலமிழந்திருக்கும் போதெல்லாம் அவர்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்திருக்கிறார்கள்.

பிரச்சினைகளை நேரடியாகப் பேசித்த தீர்த்துக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வெற்றிகௌ;ளும் ஜனாதிபதியின் முயற்சி ஒருபோதும் வெற்றியளிக்காது எனவும்,

தமது போராளிகள் எப்பொழுதும் பலம்கொண்டவர்களாகவே இருப்பதாகவும் இளந்திரையன் கூறியிருப்பதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், விடுதலைப் புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்தும் கடைப்பிடிப்பதற்குத் தயாராக இருந்ததாகவும்,

எனினும், இலங்கை அரசாங்கமே 6 வருட போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறியதாகவும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தார்.

வடக்கில் பலமான படைநர்வை இலங்கை இராணுவம் முன்னெடுத்திருக்கின்ற நிலையில், இலங்கை அரசாங்கத்துடன் போர்நிறுத்தத்திற்கும், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் தாம் தயாராக இருப்பதாக கடந்த வியாழக்;கிழமை இந்தியாவின் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சிக்கு தொலைபேசி வழியாக வழங்கிய செவ்வியில் நடேசன் கூறியிருந்தார்.

விடுதலைப் புலிகள் ஒரு போதும் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரானவர்களல்ல எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், மீண்டும் போர்நிறுத்த உடன்படிக்கைக்குச் செல்வதற்கு தாம் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments: