Thursday, 3 July 2008

ஓய்வுபெறும் பொலிஸ்மா அதிபர்களுக்கு உயர் பதவிகள்- ஐக்கிய தேசியக் கட்சி

பொலிஸ்மா அதிபர்கள் ஓய்வுபெற்ற பின்னர் அரசாங்கத்தில் அல்லது தூதரகங்களில் உயர் பதவிகள் வழங்கப்படுவதால், பின்னர் கிடைக்கவிருக்கும் பதவிகளைக் கருத்தில்கொண்டு பொலிஸ்மா அதிபர்கள் சேவையில் இருக்கும் காலங்களில் அரசாங்கத்துக்கு சாதகமாக நடந்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

“பொலிஸ்மா அதிபராகவிருந்து ஓய்வுபெற்ற விக்டர் பெரேரா, ஓய்வுபெற்ற உடனேயே வடமாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜயந்த விக்ரமரட்னவுக்கு என்ன நடைபெறுகிறது என்பதை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்” என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பொலிஸ் அதிகாரியுமான பாலித்த ரங்கபண்டார கூறியுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தில் சட்டத்துக்கு முரணாகச் செயற்படும் அதிகாரிகளைக் கண்காணிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, குழுவொன்றை நியமித்திருப்பதாகவும், இந்தக் குழு பொலிஸ் திணைக்களத்தில் சட்டத்தை மீறும் வகையில் நடந்துகொள்ளும் அதிகாரிகளைக் கண்காணித்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும் எனவும் நேற்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரிகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை அமுல்படுத்தும் நிலையில் இல்லையெனக் குறிப்பிட்டிருக்கும் அவர், அரசாங்கத்திலிருக்கும் உயர் அதிகாரிகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டே பொலிஸார் நடக்கவேண்டிய தேவை இருப்பதாகவும் கூறினார்.

“சில பொலிஸ் அதிகாரிகள் ஆளும்கட்சியைச் சேர்ந்த அரசியல் வாதிகளின் கொள்கைகளை பகிரங்கமாக முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறானவர்கள் எதிர்த்தரப்பினரின் முறைப்பாடுகளைக்கூடப் பெற்றுக்கொள்வதில்;லை” என பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கபண்டார தெரிவித்தார்.

அரசாங்கத்தின் உயர்மட்;ட அதிகாரிகளின் கொள்கைகளுக்காக சட்டத்தை மீறும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கிலேயே குறிப்பிட்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர்,
“திருகோணமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ஐந்தாம் திகதி கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் செய்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கு அவர் மறுத்;துள்ளார். தனது கடமையை சரிவரச் செய்யத் தவறியிருக்கும் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.

No comments: