தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளென்றால் அவர்களுக்கு எவ்வாறு தமிழகத்துடன் தொப்புள் கொடி உறவிருக்க முடியுமென ஹெல உறுமய கட்சியின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற வட, கிழக்கின் தற்போதைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ஜே.வி.பி.யினரின் கிளர்ச்சியின்போது அவர்கள் விமானத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்களை நடத்தவில்லை. ஆனாலும், அவர்களின் கிளர்ச்சியை அடக்குவதற்காக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எத்தனையோ நாடுகள் தமது நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சிகள், புரட்சிகளை அடக்குவதற்காக மக்களைக் கொன்று குவித்தனர். ஈராக்கில் 4 ஆயிரம் அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 6 இலட்சம் மக்களும் உயிரிழந்துள்ளனர். கிளர்ச்சிகளை அடக்குவதற்காக பல நாடுகள் மனித உரிமை மீறல்களை புரிந்தன. ஆனால், இலங்கையில் விடுதலைப் புலிகளின் கிளர்ச்சியை அடக்குவதற்காக அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இலங்கையரசு மனித உரிமைகளை பேணிப் பாதுகாப்பதுடன், மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ் மக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கின்றது. புலிகளை வெல்ல முடியாத அமைப்பாகவே பலரும் கூறினர். விமானத் தாக்குதல்களை நடத்தும் வல்லமை பெற்ற அவர்களை வெல்ல முடியாது, அழிக்க முடியாதென பல நாடுகள் கூறின. ஆனால், இன்று எமது படைகள் புலிகளை அழிப்பதில் வெற்றி கண்டுள்ளன. இதன்மூலம் உலக நாடுகளுக்கே பாடம் கற்பித்துள்ளன. அமெரிக்காவால் ஈராக்கில் செய்ய முடியாததை ரஷ்யாவால் ஆப்கானிஸ்தானில் செய்ய முடியாதவற்றை எமது படையினர் வன்னியில் செய்து வருகின்றனர். நாம் கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை செய்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், அங்கு சிங்கள மக்களே அவல நிலையில் உள்ளனர். திருகோணமலையில் 1987 ஆம் ஆண்டு சனத்தொகையில் 85,503 சிங்களவர்களும் 87,760 தமிழர்களும் 75,039 முஸ்லிம்களும் இருந்தனர். ஆனால், 20 வருடங்கள் கழித்து 2007 ஆம் ஆண்டில் சிங்களவர்கள் 84,760 ஆகக் குறைந்துள்ளதுடன் தமிழர்கள் 95,652 ஆகவும் முஸ்லிம்கள் 1,51,692 ஆகவும் அதிகரித்துள்ளனர். இதேவேளை, விடுதலைப் புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இந்தியா எங்கள் ரத்த சொந்தம், தொப்புள் கொடி உறவு, எமது பிரச்சினையில் தலையிட வேண்டுமென்கின்றனர். தாம் இலங்கையின் பூர்வீக குடிகளெனக் கூறும் இவர்களுக்கு தமிழகம் எப்படி தொப்புள்கொடி உறவானது. இதன்மூலம் இவர்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்த வந்தேறு குடிகளென்பது புலனாகின்றது.
* சம்பிக்க ரணவக்க கேள்வி; வந்தேறுகுடிகளே என்கிறார்
Friday, 25 July 2008
தமிழர் பூர்வீகக் குடிகளென்றால் தமிழ் நாட்டுடன் தொப்புள்கொடி உறவு இருப்பது எவ்வாறு?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment