கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் திருமண வைபவங்கள் களையிழந்துபோகும் நிலை ஏற்பட்டிருப்பதாக வெளிநாட்டுச் செய்திச்சேவையான ஏ.எவ்.பி. செய்தி செய்திவெளியிட்டுள்ளது.
சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில், கொழும்பிலுள்ள பெரும்பாலான ஐந்து நட்சத்திர விடுதிகளின் திருமண மண்டபங்களில் திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டாம் என விடுதி முகாமைத்துவங்களை, பாதுகாப்புத் தரப்பினர் பணித்திருப்பதால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், திருமணங்களுக்கும் மிகவும் பிரபல்யமான இடங்களாகத் திகழும் நட்சத்திர விடுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தியிருப்பதால் தமது திருமணங்களுக்கு சோதிடர்களால் குறிக்கப்பட்ட சுபமுகூர்த்தங்களை இழக்கும் நிலைக்கு மணமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்” என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியான ஹில்டன் உல்லாச விடுதியில் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி தனது திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்திருக்கும் மணமகள் அனொஷ்கா, தற்பொழுது திருமணம் நடத்தமுடியாது எனக் கூறப்பட்டிருப்பதானது தனக்கு அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“ஒரு வருடத்துக்கு முன்னர் ஜோதிடர் வழங்கிய சுபமுகூர்த்தத்துக்கு அமைய திருமணத்தை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தோம்” எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், ஆனால் இன்று சாதாரண வகையிலேயே மணமகனைக் கரம்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
“திருமணத்துக்கான அழைப்பிதழ்கள் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டன. உறவினர்களை எவ்வாறு முகம்கொள்ளப்போகின்றேன் எனத் தெரியவில்லை” என்றும் அனொஷ்கா ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment