இலங்கையில் எண்ணெய் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்காக இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொள்ளாது முறையற்ற விதத்தில் செய்யப்பட்டுள்ளது
என்றும் இந்த ஒப்பந்தம் தொடர்பான சிபாரிசுகளை ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நிபுணர்களையும் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் விமல் வீரவன்ச நேற்று (08) பாராளுமன்றில் தெரிவித்தார்.
இது பற்றி மேலும் கருத்துத் தெரிவித்த விமல்வீரவன்ச- இலங்கையில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்ள இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அகழ்வுப் பணி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் செய்யப்படும் முன்னர் பின்பற்றப்பட வேண்டிய எந்த விடயமும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
ஒரு நாட்டின் எரிபொருள் வளம் என்பது அந்த நாட்டிற்கு மிக முக்கியமானதொன்று. இதைச் சரியான முறையில் கையாண்டால் நாட்டைச் செல்வச் செழிப்புள்ள நாடாக மாற்றலாம். பிழையான முறையில் கையாண்டால் நாடு அழிந்துவிடும் என்றார்.
அதேநேரம் இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட முழுமையான ஒப்பந்த விபரம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமரப்பிக்கப்படுமென பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி நேற்று (08) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment