Friday, 4 July 2008

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஆற்றுக்குள் விழுந்து காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

கிண்ணியா, உப்பாற்றுப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளை இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஆற்றுக்குள் விழுந்து காணாமல்போன இளைஞர் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் நேற்றுமாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூதூர் உப்பாற்று களப்புப் பகுதிக்கு பாடையினரின் அனுமதியுடன் மீன்பிடிக்கச் சென்ற கிண்ணியா, கூபா நகரைச்சேர்ந்த மீனவரான முகமது இஸ்மாயில் அன்சார் என்ற 22 வயது இளஞரே இவ்வாறு நேற்றுமாலை ஆற்றுப்பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது; நேற்றுமுன்தினம் காலை மேற்படி மீனவரும் அதே இடத்தைச் சேர்ந்த குத்தூஸ் சராஸ் (வயது24) என்ற மீனவரும் உப்பாற்றுப்பகுதியில் கடற்படையினரின் அனுமதியைப் பெற்று மீன்பிடிப்பதற்காக வள்ளமொன்றில் சென்றனர். இந்நிலையில் நேற்றுமாலை குத்தூஸ் சராஸ் என்ற மீனவர் நீந்திக்கரைசேர்ந்திருந்தார். அவர் தமது உறவினர்களிடம் தாம் சென்ற வள்ளத்தின் மீது இனந்தெரியாத சிலர் பிர யாகம் மேற்கொண்டதாகவும் அன்வர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஆற்றுக்குள் விழுந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இதுகுறித்து மூதூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்றுக்காலை மீனவர்குழுவொன்றும் பொலிஸாரும் படையினரின் அனுமதியுடன் வள்ளங்களில் சென்று மேற்படி இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கிழக்கு மாகாணசபை ஐ.தே.க. உறுப்பினரான எம்.எஸ்.தௌபீக்கும் சம்பவ இடத்திற்குச் சென்று மீனவரைத் தேடும் நடவடிக்கைளுக்கு படையினரிடம் அனுமதி பெற்றுக்கொடுத்து உதவினார்.

சுழியோடிகளும் குறித்த மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டுவந்தநிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் காணாமல்போன மீனவ?ன் சடலம் துப்பாக்கிச்சூட்டுக்காயங்களுடன் உப்பாற்றுத்துறை பகுதியிலிருந்து மீட்கப்பட்டது.

இதையடுத்து திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: