Tuesday, 22 July 2008

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பணிப்பாளருக்கு அச்சுறுத்தல்-ஊடக அமைப்புக்கள்

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரியவை, இனந்தெரியாத குழுவொன்று பின்தொடர்கின்றமை குறித்து தாம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக நாட்டின் முன்னணி 5 ஊடக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஊடகவியலாளர்களான நாமல் பெரேரா, கீத் நொயர் ஆகியோர் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் குறித்து இராணுவத் தளபதி கருத்து வெளியிட்ட மிகக் குறுகிய காலத்தில் இவ்வாறான ஒரு அச்சம்தரும் சம்பவம் நடைபெற்றிருப்பதாக ஊடக அமைப்புக்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரியவின் வீட்டினை கடந்த சில தினங்களாக இரண்டு குழுக்கள் அவதானித்து வந்ததாகவும் ஊடக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதில் ஒரு குழுவினர் காலைவேளையில் பொதி ஒன்றினைக் கையளிப்பதுபோல் பாவனை செய்து ரங்க கலன்சூரியவைப் பற்றி விசாரித்ததாகவும் ஊடக அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன், இனந்தெரியாத நபரொருவர் கடந்த வாரம் தொலைபேசி மூலம் அவரையும் அவரது அலுவலக அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாகவும், இது தொடர்பில் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தாக்குதல்களுக்குள்ளான ஊடகவியலாளர்களான கீத் நொயர் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஆங்கிலப் பிரிவின் பொறுப்பாளராகவும், நாமல் பெரேரா பத்திரிகை ஸ்தாபனத்தின் பதில் முகாமையாளராகவும் பணிபுரிந்தவர்கள் எனவும் ஊடக அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பெயருக்கு களங்கம்கற்பிக்கும்வகையில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றமை குறித்து தாம் ஏற்கனவே கவனம் செலுத்திவருவதாகவும் 5 ஊடக அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.

ஊடக சுதந்திரத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஊடக அமைப்புக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளன.

No comments: