சார்க் உச்சி மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம் ஓர் இராஜதந்திர கபட நாடகமென ஜே வி பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம், இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் என்பன இணைந்து இந்த கபட நாடகத்தை அரங்கேற்றுவதாக அவர் மேலம் சாடியுள்ளார்.
விடுதலைப்புலிகளினால் ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்பட்டுள்ள யுத்த நிறுத்தம் குறித்து அவையில் கட்சிகள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கும் என விடுதலைப்புலிகளின் நடுவகப்பணியகம் தெரிவித்துள்ளது
விடுதலைப் புலிகளின் இந்த யுத்த நிறுத்த அறிவிப்பு, இலங்கை அரசாங்கத்தின் யுத்தம் தொடர்பான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்தாதென அரசாங்கத்தின் பாதுகாப்பு பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
25 வருட கால அனுபவம் இருக்கும் நிலையில் விடுதலைப்புலிகளின் தந்திரோபாயங்களில் சிக்கிக்கொள்ள அரசாங்கம் தயாராக இல்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்; விடுதiலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தால் மாத்திரமே அதை பரிசீலிக்க தயார் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சார்க் உச்சி மாநாடு நடைபெறவுள்ள சூழ்நிலையில் விடுதலைப்புலிகளின் இந்த அறிவிப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டை முற்றுமுழுதாக நம்புவது சிரமமான காரியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment