Tuesday, 15 July 2008

சார்க் பாதுகாப்புக் கெடுபிடிகள்

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) உச்சிமகாநாடு இன்னும் இருவாரங்களில் நடைபெறவிருப்பதை முன்னிட்டு தலைநகர் கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைவிட கூடுதலான பாதுகாப்பு நடவடிக்கைகளை முப்படையினரும் பொலிஸாரும் மேற்கொள்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

எமது பிராந்தியத்தைச் சேர்ந்த 8 நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடவிருக்கும் சரித்திர முக்கியத்துவமிக்க சந்தர்ப்பத்தில் தலைநகரில் துரதிர்ஷ்டவசமான எந்தவொரு சம்பவமும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதில் அரசாங்கத்துக்கு இருக்கும் கரிசனையையும் கடப்பாட்டையும் முற்றுமுழுதாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்ற அதேவேளை,


தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளைவாக மக்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும் வீண் சிரமங்கள், அநாவசிய கெடுபிடிகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டியது எமது கடமையாகும்.

வடக்கு, கிழக்கில் இருந்து வருபவர்களுக்கு தங்குமிட வசதிகளைக் கொடுக்க வேண்டாமென்று கொழும்பில் உள்ள பல லொட்ஜ்களின் உரிமையாளர்களை பொலிஸார் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது.


அதேவேளை, வடக்கு, கிழக்கில் இருந்துவரும் மக்களுக்கு தங்குமிட வசதிகளைக் கொடுப்பதற்கு முன்னதாக அவர்களிடம் சொந்த இடங்களின் கிராம சேவகர்களினால் வழங்கப்பட்ட அத்தாட்சிப்பத்திரம், பொலிஸ் பதிவு போன்ற ஆவணங்களை சில லொட்ஜ் உரிமையாளர்கள் கோருவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.


கொழும்புக்கு வந்து சேர்ந்த பின்னர்தான் லொட்ஜ்களில் தங்குவதற்கு கிராமசேவகர்களின் அத்தாட்சிப்பத்திரமும் பொலிஸ் பதிவும் தேவைப்படுவதாக தங்களுக்கு தெரியவருவதாக அந்த மக்கள் கூறுகிறார்கள்.


கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து தலைநகருக்கு வந்து தங்குபவர்கள் பற்றிய முழுமையான விபரங்களை சம்பந்தப்பட்ட லொட்ஜ் உரிமையாளர்கள் தெரிந்துவைத்திருப்பதிலோ அல்லது அவர்களைப்பற்றிய விபரங்களை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களைக் கோருவதிலோ தவறு ஏதுமில்லை.


ஆனால், அத்தகையதொரு நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று பொலிஸாரிடமிருந்து முறைப்படியான அறிவுறுத்தல் விடுக்கப்படாதபட்சத்தில் அந்த மக்களை வீண் தொல்லைகளுக்கு உட்படுத்துவது தவறேயாகும். தவறு மட்டுமல்ல, சட்டவிரோதமானதுமாகும்.


இன்றைய இடர்மிக்க கால கட்டத்திலே வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்காகவே தலைநகருக்கு வருகிறார்கள்.


இவர்களில் யாருமே உல்லாசப்பயணத்தை மேற்கொண்டு கொழும்பு வருவதில்லை. குறிப்பாக, வடபகுதிமக்கள் கப்பல்மூலமாக அல்லது விமான மூலமாகவே கொழும்புக்கு வரமுடியும்.


விமானத்தில் கொழும்பு வந்து போவதற்கு ஒருவடபகுதிப் பயணி 20 ஆயிரம் ரூபாவைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். கொழும்பில் இருந்து விமானத்தில் தென்னிந்தியாவுக்கு சென்றுவருவதற்குக் கூட இந்தளவுபணம் வேண்டியதில்லை.


பெருஞ் சிரமங்களுக்கு மத்தியில் அத்தியாவசிய அலுவல்களுக்காக வடக்கு, கிழக்கில் இருந்து வருகின்ற அப்பாவிமக்கள் கொழும்பில் தங்குகின்ற காலகட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் பொதுவான விதிமுறைகள் கூட வகுக்கப்படுவதில்லை.


இடத்துக்கு இடம் வித்தியாசமான நடைமுறைகளை பொலிஸார் கடைப்பிடிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தற்போது தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தலைநகரின் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள லொட்ஜ்களில் தங்கியிருக்கும் வடக்கு, கிழக்கு வாசிகளை அங்கிருந்து வெளியேறிவிடுமாறு பொலிஸார் நெருக்குதல் கொடுப்பதாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.


இது தொடர்பாக மேலும் விபரங்களைச் சேகரித்துவருவதாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஒழுங்கமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்திருக்கிறார்.

இது இவ்வாறிருக்க, வீதிச் சோதனை நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பொலிஸாருக்கும் படையினருக்கும் மக்களைச் சோதனை செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஒரே மாதிரியான அறிவுறுத்தல்கள் விடுக்கப்படவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது.


அவர்கள் தங்கள் மனம் போன போக்கில் மக்களிடம் குறிப்பாக, தமிழர்களிடம் ஆவணங்களைக் கோருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பொலிஸ் பதிவு ஆவணத்தை தமிழர்கள் தங்களுடன் எப்போதுமே கொண்டு திரியவேண்டுமென்று சில படையினர் வற்புறுத்துகிறார்கள்.


அதனால் சில சோதனை நிலையங்களில் தமிழர்கள் வீண் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட இடத்தில் தங்கியிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான பொலிஸ் பதிவு ஆவணத்தை மக்கள் தங்களுடன் எப்போதுமே எடுத்துச் செல்ல வேண்டுமென்று எந்தவிதமான அறிவுறுத்தலுமே பொலிஸ் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக விடுக்கப்படவில்லை.


ஆனால், பயணத்தின் இடைநடுவில் திடீரென்று பொலிஸ் பதிவை மக்களிடம் பொலிஸாரும் படையினரும் கோரும்போது அவர்கள் அந்தரப்பட வேண்டியிருக்கிறது.

வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தொழில் நிமித்தம் பலவருடங்களாக தலைநகரில் வசிக்கும் பட்சத்தில் அவர்களின் தேசிய அடையாள அட்டையைப் புதுப்பித்திருக்க வேண்டுமென்றும் படையினர் சில சந்தர்ப்பங்களில் வற்புறுத்துகிறார்கள்.


வடக்கிலோ, கிழக்கிலோ பிறந்த ஒருவர் கொழும்பில் வாழ்வதாக இருந்தால் தேசிய அடையாள அட்டையை புதுப்பிக்க வேண்டுமென்று சட்டரீதியான தேவை எதுவும் இருக்கிறதா? சோதனை நிலையங்களில் கடமையில் ஈடுபட்டிருக்கும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்கோ அல்லது படைவீரருக்கோ எழுந்தமானத்தில் தோன்றுகின்ற சந்தேகத்தினால்அல்லது அவரது கோணல் புத்தியினால் அப்பாவிகள் கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.


உரிய முறையில் படையினருக்கும் பொலிஸாருக்கும் ஒரே மாதிரியான அறிவுறுத்தல்கள் விடுக்கப்படாதமையே இந்தப் பிரச்சினைக்குக் காரணமாகும். பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, முன்னைய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சாதாரண மக்களுக்கு வீண் தொல்லைகளை ஏற்படுத்தாத நடைமுறைகளை அரசாங்கம் வகுக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பிலேயே இந்தப் பிரச்சினைகளை இங்கு சுட்டிக்காட்ட நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.

No comments: