Sunday, 6 July 2008

ஓமந்தை சோதனைச் சாவடி மூடப்பட்டமையால் நான்கு லட்சம் தமிழ் மக்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர்

வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடிப்பகுதி மூடப்பட்டுள்ளமையை அடுத்து வன்னியில் பாரிய மனிதாபிமானப் பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வன்னியில் வாழும் சுமார் நான்கு லட்சம் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலகத்திற்கு அருகில் இலங்கை அரசாங்கத்தின் விமானப்படையினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் கடந்த ஜூலை முதலாம் திகதி முதல் ஓமந்தையில் தமது பணிகளை விட்டு விலகியுள்ளனர்.

இதன் காரணமாக வன்னிக்கான உள்நுளைதல் மற்றும் வெளியேறல் செயற்பாடுகள் முடங்கிப் போயுள்ளன. கிளிநொச்சி அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்தின் தகவல்படி வன்னியில் இன்னும் இரண்டு கிழமைகளுக்கான உணவுப்பொருட்களே கையிருப்பில் உள்ளதாக அறிவித்துள்ளார்.

அதுவரை ஓமந்தை சோதனைச் சாவடி மூடப்பட்டிருக்குமானால் வன்னியில் உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் உயரக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

கிளிநொச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ப சத்தியமூர்த்தி வைத்தியசாலையில் இன்னும் ஒரு மாதத்திற்கான மருந்துப்பொருட்களே கையிருப்பில் இருப்பதாக அறிவித்துள்ளார்.

நோயாளிகளை அவசரமாக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றவேண்டுமானால் விசேட அனுமதியைப் பெறவேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதக் கணக்கெடுப்பின்படி கிளிநொச்சியில் 195 ஆயிரம் பேரும் முல்லைத்தீவில் 220 ஆயிரம் பேரும் வாழ்கின்றனர் எனினும் மனிதாபிமான நிறுவனங்களின் தகவல்களின்படி மக்களின் இடப்பெயர்வுகள் காரணமாக இந்த எண்ணிக்கையில் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கியுள்ளதாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

இதற்கான கடிதம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தொண்டர் நிறுவன இணைப்பாளர் பாவரசன் எனப்படும் தியாகராஜாவினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவும் தமது தரப்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மூடப்பட்ட ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக கடும் நோயாளிகள் அனுமதி

கடும் நோய்வாய்ப்பட்டு வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவந்த நோயாளிகள் ஓமந்தைச் சோதனைச் சாவடி ஊடாக வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஓமந்தை யுத்தசூனியப் பிரதேசத்தில் எறிகணைகள் வீழந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது கண்காணிப்புப் பணிகளை இடைநிறுத்திவிட்டு ஓமந்தைப் பகுதியிலிருந்து வெறியேறியிருந்தது.

இதனைத் தொடர்ந்து மூடப்பட்ட ஓமந்தைச் சோதனைச் சாவடி ஊடாக கடுமையான நோயாளிகள் மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கண்காணிப்பின் முன்னிலையிலேயே நோயாளிகள் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மூன்று பெண்கள் உட்பட நான்கு நோயாளிகள் ஓமந்தைச் சோதனைச் சாவடி ஊடாக அனுமதிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வருகையைத் தொடர்ந்து இராணுவத்தினர் ஓமந்தைச் சோதனைச் சாவடியைத் திறந்து நோயாளிகளை அனுமதித்து, வவுனியா வைத்தியசாலைக்குச் சொந்தமான நோயாளர் காவுவண்டியில் நோயாளிகளை அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

No comments: