Saturday, 19 July 2008

தமிழ்நாட்டு ஊடகங்கள் உள்நோக்கிய பார்வை மாத்திரமே கொண்டவை-நாகார்ஜுனன்

ஈழப்பிரச்னை, போரை தமிழ்நாட்டு, இந்திய ஊடகங்கள் இன்று அணுகும் முறை பற்றி உங்களுக்கு வரலாற்றுரீதியான விமர்சனப்பார்வை இருக்குமல்லவா…

இந்திய, தமிழ்நாட்டு ஊடகங்கள் உங்கள் சமுதாயத்தின் பிரச்னையை அணுகுவது, இலங்கைப்பிரச்னையை அணுகுவது எப்படிங்கறதுக்கு முன்னால இதற்குப் பின்னணியாக ஒரு முக்கிய விஷயத்தைப் பார்க்கணும்…

பொதுவாகவே தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு ஒரு சர்வதேசப்பார்வையோ, வீச்சோ கிடையாது. ஏன், இந்தியாவிலேயே. டில்லி, பெங்களூரை விட்டா இந்திய நகரங்களிலேயே அதுக்கெல்லாம் நிருபர்கள் இல்ல. தென்னாசியாவை எடுத்துக்கிட்டீங்கன்னா, தமிழ்நாட்டு ஊடகங்கள் பலதுக்குக் கொழும்புல முழுநேர நிருபர்கள் இல்ல.


மலேசியாவில், சிங்கப்பூரில் முழுநேர நிருபர்கள் இல்ல. தினமணிக்கு மாத்திரம் ஒருகாலத்தில் இருந்துருக்கலாம்னு நினைக்கறேன். நம்முடைய கொழும்பு நிருபர்னு போட்டு தினத்தந்தியில செய்தி வாசித்திருக்கீங்களா… இங்கே எல்லாமே ஆங்கிலத்தில் இயங்கும் சர்வதேச, இந்தியச் செய்தி நிறுவனங்களோட உபயம்தான். அதுல வர்றதை வைச்சு தமிழில் ந்யூஸ் எழுதுவார்கள்.


இந்திய ஆங்கில ஊடகங்கள எடுத்துக்கிட்டா - ஹிந்து பத்திரிகை உங்கள் பிரச்னையைக் கையாளும் எதிர்மறையான விதத்தைத் தள்ளிவைத்துவிட்டுப் பார்த்தால் அந்தப்பத்திரிகைக்கு மாத்திரம்தான் உலகத் தலைநகரங்கள் பலதிலும் முழுநேர நிருபர்கள் இருக்கிறார்கள்.


உலகப்பிரச்னைகள் பற்றி பலவிதப்பார்வைகளுடன் ஆய்வுகள் அதில்தான் வருது. மற்ற பத்திரிகைகளுக்கு அப்படி முழுநேர நிருபர்கள் இல்ல.


கேரளத்தின் மலையாள மொழி ஊடகங்கள் வளைகுடாப்பகுதியில் இயங்குவதை விட்டுவிட்டுப் பார்த்தால் இந்திய மொழி ஊடகங்கள் வெளிநாடுகள் பலதில் முதல்படி கூட எடுத்துவைக்கலங்கலாம். NDTV, CNN-IBN போன்ற ஆங்கிலத் தொலைக்காட்சி சானல்கள், லண்டனில் படிக்க வர்ற மாணவர்களை, பயிற்சிப்பத்திரிகையாளர்களை நிருபர்களாக்கி வைத்திருக்கிறார்கள். ஒருவர் என்னிடம் வந்து பேட்டி எடுத்தார், அவருக்குத் டி்ல்லியை ஒட்டி இருக்கற ஹரியானா கூட இந்தியாவா தெரியல்ல…


இந்தியச் செய்திநிறுவனங்கள் நிலையோ படுமோசம். இந்திய ஊடகங்களுக்கு தென்னாப்பிரிக்காவை விட்டா ஆப்பிரிக்காவில வேறெங்கும் முழுநேர நிருபர்கள் கிடையாது. தென்-அமெரிக்காவில நிருபர்கள் கிடையாது.


ருஷ்யாவில, கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிஸ்ட் அரசுகள் அழிந்து மாற்றம் நடந்த காலகட்டத்தில யாருமே பெரிசா அங்கே இந்தியப்பத்திரிகைகள் சார்பில போய் எழுதல.


தொண்ணூறுகள்ல பால்கன் பகுதியில் இன, மதப்போர் நடந்தப்போ இந்திய நிருபர்கள் யாரும் அங்கே போகல. 1995-96 காலகட்டத்தில் அப்படி ஒரு வாய்ப்புக் கிடைச்சு பெல்கிரேட் நகரத்துக்கும் காஸவோ பகுதிக்கும் நான் போன போது இந்தியாவிலிருந்து அங்கே போன ஒரே ஆள் நான்தான்னு தெரிஞ்சுது.

இந்தியபத்திரிகைகளுக்குப் பல நாடுகளில் நிருபர்களே இல்ல. எடுத்துக்காட்டா 1970-களின் இறுதியில கம்போடியாவில் நடந்த அழிவு, படுகொலை பற்றி நேரடியா யாரும் போய்ப்பார்த்து எழுதல. எழுதியதெல்லாம் மேற்கத்திய நிருபர்கள்தான்.


அதை வைத்து மார்க்ஸிஸ்ட் அணிகள் அதெல்லாம் பிரச்சாரம்னு சொல்லிட்டு வந்தாங்க. இப்படிப் போய்ச்செய்யறதை ஒரு இந்திய ஊடகத்தாலவும் அன்னிக்கு நினைச்சுக்கூடப் பார்க்க முடியாத நிலை.


அதே போல நான் மாணவனா இருந்தப்போ நடந்த 1979 ஈரானியப் புரட்சி பற்றி மேற்கத்திய ஊடகங்களைத் தாண்டிச் செய்தி தெரிஞ்சுக்க ரொம்ப சிரமப்பட்டோம். இந்த முப்பது வருஷத்தில தொழில்நுட்பம் வளர்ந்திருக்கு, இந்திய ஊடகங்கள் அளவில வளர்ந்திருக்காங்க, ஆனா அவங்க பார்வை வளரல்ல..


இன்னிக்கு ஈராக்கில இவ்வளவு அழிவு நடக்குது. ஈராக்கிலேர்ந்து இவ்வளவு பேர் சிரியாவுல நுழைஞ்சு அகதியா இருக்காங்க, பாலஸ்தீனத்துல ஆக்கிரமிப்புக்கு எல்லையில்ல, ஆனா ஒரு இந்திய ஊடகமாவது நேரே இதையெல்லாம் செய்தியாகக் கொடுக்குமா, கிடையாது.

இப்போ கம்போடியா உதாரணத்தையே எடுத்துக்கலாம். கல்கத்தாவிலேர்ந்து முதல்ல வங்க மொழி எழுத்தாளர்கள் போயிருக்காங்க.


அதோட தொடர்ச்சியாகத்தான் எழுத்தாளர் அமிதாவ் கோஷ் பத்து வருஷம் முன்னாடி கம்போடியாவுக்கும் பர்மாவுக்கும் போறாரு. இவரோட கம்போடியா பற்றிய புஸ்தகத்தை மார்க்ஸியம் பேசறவங்க படிச்சா அப்படியே வாயடைச்சுப்போயிடுவாங்க.

தமிழ்நாட்டு ஊடக முதலாளிகள் பலர் டில்லியில அவர்களுக்கு அடங்கிய, இல்லாட்டி அவர்களுடைய வணிக நலன்கள் சார்ந்த முழுநேர நிருபர்களை வைத்திருக்கிறார்கள்.


இந்திய நகரங்களில் அல்லது தெற்காசிய நாடுகளில் இருந்தோ சேகரிக்கும் செய்திகளை விமர்சனப்பூர்வமா எழுதும் திறமையானவர்களை நியமிக்கும் மனப்பாங்கில்ல..


இதில நிருபர்களையும் கொஞ்சம் குறை சொல்லலாம். இந்தியாவின் அந்தந்த மாநிலங்களில் புழங்கி, அந்தந்த மொழி தெரிந்த தமிழ்ச்செய்தி நிருபர்கள் எத்தனை பேர் முழுநேரமா இருக்காங்கன்னு நினைக்கிறீங்க…


ஹிந்தி அப்புறம் மலையாளம், வங்காள மொழி முழு நேர நிருபர்களை இந்தியாவின் பல மாநிலங்கள்ல பாக்கலாம்.


ஆனா தமிழ் ஊடகங்களில இருக்கிற பெரும்பான்மை நிருபர்களுக்கு தமிழ்தாண்டி ஆங்கிலம் தாண்டி வேறு ஒரு மொழி முழுசாத் தெரியாது. பல இந்திய மொழிகளை அவர்கள் கேட்டிருக்கக்கூட மாட்டார்கள்.


தவறித் தெரிஞ்சாலும் அந்த மொழியோட political idiom அதாவது அரசியல்-வழக்கு அவர்களுக்கு முழுமையாப் புரியாது ஆக, தமிழ்நாட்டு ஊடகங்களும் சரி, நிருபர்களும் சரி ஆங்கிலச்செய்தி நிறுவனங்கள் வழியாக பொதுவாக இந்த வேற்று மாநிலச் செய்தியைச் சேகரிப்பதால் சொந்தப்பார்வை இல்லாமல் போகிறது.


ஆக இந்திய, தமிழ்நாட்டு ஊடகங்கள் பொதுவாக உள்நோக்கிய பார்வை மாத்திரமே கொண்டவை என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் இருக்கணும்ங்கிறீங்க..

இப்போ உங்க பிரச்னைக்கு வரலாம். அதைப் பரவலாப் பார்க்கணும். கடந்த இருபது ஆண்டுகளில் எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கோ, வன்னிக்கோ, கிழக்கு மாகாணத்துக்கோ போய் அங்குள்ள பிரச்னைகளை நேரடியாகக் கண்டு தமிழில் எழுதியவர்களை விரல்விட்டு எண்ணிடலாம்.


தென்னிலங்கை அரசியல் ஏன் தமிழர் கோரிக்கையை எதிர்ப்பதாக இயங்குகிறது என்று உணர்வுப்பூர்வமாக இல்லாம அறிவுப்பூர்வமா கட்டுரை தமிழ்நாட்டு ஊடகங்கள்ல வருமா… இந்திய ராணுவம் போனபோது ஏ எஸ் பன்னீர்செல்வன் செய்திருக்காரு. நக்கீரன்ல செஞ்சிருக்காங்க, தினமணில கார்மேகம் செஞ்சிருக்காரு. சென்னையைச் சார்ந்த ஆங்கிலப்பத்திரிகை நிருபர்கள் அப்பப்ப போயிட்டு வந்திருக்கிறாங்க, டிலலில இருககற நிருப்ர்கள் போயிருக்காங்க.


அனிதா பிரதாப், முராரி, பகவான் சிங், நாராயணசாமின்னு போயிட்டுவந்திருக்காங்க. அவர்களோட பார்வை எப்படியிருந்தாலும் போகணும்ங்கற உந்துதல் இருந்திருப்பது உண்மை. ஆனா வேறே இந்திய மொழிகளைச் சார்ந்த ஊடக நிருபர்கள் போயிருக்காங்களான்னா இல்லதான்னு சொல்லணும்.

ஆனால் பொதுவாகவே இந்தப் பிரச்னையோட தீவிரத்தை அதன் சிக்கலோடு, தமிழ்நாட்டு மக்களுக்கு, தென்னக மக்களுக்கு, இந்திய மக்களுக்கு பரந்துபட்ட அளவில் எடுத்துச்சொல்ல வேண்டும்ங்கிற நோக்கம், அக்கறை இந்திய ஊடகங்களுக்கு இல்லை.


தமிழ்நாட்டில சில கட்சிகளை, அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போய்வந்திருக்கிறார்கள், திரைப்படத்துறை சார்ந்தவர்கள் போய்வந்திரு்க்கிறார்கள, விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் என்ற சார்பில் அவர்கள் சில செய்திகளை, விஷயங்களைச் சொல்லலாம்.


ஆனால் அந்த அமைப்பை ஆக்கப்பூர்வமாவாது விமர்சிக்கிற நோக்கம் ஏதும் இவ்ர்களுக்கு இல்லைனனு தெரியும்போது இத ஒரளவுக்கு மேல எடுத்துக்க முடியாமப்போகுது. தமிழ்நாட்டைச் சார்ந்த சிற்றிதழ்களில், இடைநிலைப்பத்திரிகைகளில் பயணக்கட்டுரைகள் சில வந்திருக்கு… அவ்வளவுதான். ஆக, பத்திரிகையாளர்களோ, பத்திரிகை நிறுவனங்களோ இதைச் செய்யத் தயங்கறாங்க எனபதால
எழுத்தாளர்கள்தான் இதை முன்கை எடுத்துச் செய்யவேண்டியிருக்கு.

இந்திய ஊடகங்களை எடுத்துக்கொண்டால் இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கைன்னு இருக்கிற நிருபர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் நீட்சியாக மாத்திரம் செயல்படுகிறார்கள். இதைத்தாண்டி ஒருசிலர் மாத்திரம் செயற்பட்டிருக்கலாம். அப்படிச் செயல்பட்ட என்னோட நண்பர்கள் ஒரிருவர் இருக்காங்க, ஆனா அது விதிவிலக்குதான். பொதுவாக அவர்களுடய பார்வை, கண்ணோட்டம், மனப்பாங்கு எல்லாமே இந்திய அயல்விவகாரத்துறை வகுத்துத்தரக்ககூடிய வரையறையைத் தாண்டாம – பெரும்பாலும் இந்திய அரசாங்கத்தை விமர்சனம் செய்வதைத் தவிர்க்கக்கூடிய ஒரு வரையறைக்குள்தான் இருக்கிறாங்க. இவர்களோட சர்வதேசப்பார்வை என்பது இந்திய அரசாங்கத்தோட புவிசார் அரசியல் நிலையை ஒட்டித்தான், அதோட கேந்திர முக்கியத்துவம் பற்றித்தான் இருக்கு. தென்னாசியாவில காத்மாண்டு, டாக்கா, இஸ்லாமாபாத், கொழும்பு நகரங்கள்ல இருக்கற இந்தியப் பத்திரிகை, செய்தி நிறுவன நிருபர்கள் பொதுவா இந்தியத் தூதரகங்கள் வகுக்கிற எல்லை தாண்டிச் செயல்படறதில்ல…

இந்திய ஊடகங்களின் மனப்பாங்கைப் பார்த்தால் இன்னொரு விஷயம் தெரியுது – இவங்களோட சர்வதேசப்பார்வைங்கறது இந்திய விடுதலைப் போராட்டக்காலத்தில தொடங்குது. அந்தக்காலகட்டத்தில காலனியத்தால இந்தியாவிலேர்ந்து புலம்பெயர்நது வாழ்கிறவர்கள் பற்றிய விஷயங்களை இந்தியாவில இருக்கற மக்களுக்குக் கொண்டு சேர்க்கணுமங்கற வேகம் இருந்தது. இந்தியாவிலேர்ந்து போன இலங்கை மலையக மக்கள், தோட்டத்தொழிலாளர் தவிர ஃபிஜி, மலேசியா, பர்மா முதலான நாடுகளில் இருக்கற இந்திய வம்சாவழியினர் பற்றி நிறைய வந்தது – செய்தியா, கட்டுரையா. அதோட ருஷ்யப்புரட்சி, மார்க்ஸியம்னு அந்த சர்வதேசப் பார்வை வருது.

இன்னிக்கு இந்த மரபு மங்கிப்போய்விட்டதுன்னு தோணுது. சர்வதேசப் பார்வைன்னு யாரும் கஷ்டப்படுவதை இப்போ இந்த ஊடகங்கள் சொல்றதில்ல. அதாவது, காந்தியார் போன்றவர்கள் காலத்திலிருந்து வர்ற மரபுக்கு எதிரா இவங்க இயங்கறாங்க. 1948-கறது காந்தியாரை இந்திய வலதுசாரி மதவாதிகள் கொன்னுபோட்ட வருஷம் மாத்திரமில்ல.. அது இலங்கை மலையக மக்களை நாடற்றவராக்கிய வருஷமும் கூட. ஒருவிதத்தில் பார்த்தா இந்தியப்பரப்பு மக்களில் பலர் இந்தியாவுக்குள்ளே அல்லது வெளியே இருந்தாலும் அனைத்தையும் இழக்கிற எதிர்காலம் வரலாம் என்பதால இந்த இரண்டையும் என்னால பிரிக்க முடியல… 1964-ஆம் வருஷம் இந்த மலையக மக்களை இந்தியாவும் இலங்கையும் கூறுபோட்டுப் பிரிக்கும்போது இந்திய, தமிழ்நாட்டு ஊடகங்கள் எனன எழுதினாங்கன்னு பார்க்கணும். அதிலதான் எல்லாச் சோகமும் இருக்குது….

இன்னிக்கு இந்திய ஊடகங்கள் இந்த மரபைக் கைவிட்டுட்டாங்க. மாறாக, இந்தியாவிலேர்ந்து உலக அரங்குக்குப் போற முதலாளிகள், உயர்மத்தியதர வர்க்த்தினர், மென்பொருள் நிபுணர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் பற்றி எழுதறதா இன்னிக்கு இந்திய ஊடக உலகமே மாறிப்போச்சு.

மலேசியா, பர்மாவில இருந்து சாதாரணத் தமிழர்கள் இரண்டாம் உலகப்போர்க்காலத்தில தப்பி வந்திருக்காங்க. எவ்வளவோ பேர் நடந்தே வந்திருக்காங்க, கப்பலில வந்திருக்காங்க. எனது பர்மா வழிநடைப்பயணம் எழுதினார் வெ. சாமிநாத சர்மா. திரும்பிய அந்த சோகத்தை திராவிட இயக்கத்தோட ஆரம்பக்காலத்து நாடகங்களில், படங்களில், அண்ணாத்துரை, எம் ஆர் ராதா, கருணாநிதியின் வசனங்களில் கேட்டுகொண்டே இருந்தோம். அந்த அளவு துயர எதிரொலிப்பு சமுதாயத்தில இருந்திருக்கு. அப்புறம் சிங்காரத்தோட புயலிலே ஒரு தோணி, மாநீன்னு ஹெப்ஸிபா ஜேசுதாஸன் அம்மா எழுதிய நாவல்னு இரண்டு மாத்திரம் வந்திருக்கு… ஆனால் இன்னிக்கு பர்மாவில் இருக்ககூடிய இந்திய வம்சாவழியினரின் நிலையை இல்லாட்டி அவர்களுடைய இந்திய வாழ்க்கையின் தொடர் அவலத்தை வரலாற்றுக்களத்தில வைத்து யாராவது எழுத முடியுமா? நிலைமை இலகுவாக இருக்கும் பொழுதுகூட யாரும் போகல. அகிலன் மலேசியா போய் நாவல் எழுதினாரு. அதைப் பெரிசாச் சொல்ல முடியாதுன்னாலும் அந்த பழைய மரபில வருது. அதைத் தொடரக்கூடிய முனைப்பு யாருக்கும் இல்லங்கறது வெட்கம்தான்.

அமிதாவ் கோஷ் கம்போடியாவுக்குப் போன பிறகு பர்மாவுக்கும் போய்ட்டு வாறாரு. அங்க இருக்கற இந்திய வம்சாவழியினர், வங்காளிகள் பற்றி எழுதறாரு. சர்வதேசப்பார்வையின் நீட்சி அது. அப்புறம் பர்மா பற்றிய நாவலாவே அடுத்தது மாறுது. பீஹாரிலிருந்து கடல்தாண்டிப்போன அந்தக்காலத்துத் தாழ்த்தப்பட்ட பெண்ணோட நாவலா அடுத்தது வருது. இலங்கை மலையக மக்களின் சோகம் பற்றி அறுபது எழுபது வருஷத்துக்கு முன்னாடி புதுமைப்பித்தன் எழுதிய துன்பக்கேணி மாதிரி யாராவது மலையக மக்கள் பற்றிப் புதுசா யோசிச்சு எழுதற வரைக்கும் இந்த சோகம் தெரியாம இருந்துகிட்டே இருக்கும்.

இப்போ கடைசியா உங்க பிரச்னைக்கு மீண்டும் வரலாம். இலங்கை வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு போறதுக்கு தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு என்ன தடை? அவ்வப்போது வரும் போர்நிறுத்தக காலத்தில் சிலர் இயக்கச்சார்போட போயிருக்கலாம். அது சரிதான்னு அவங்க நினைக்கலாம். ஆனா அது பெரிய விஷயமில்லன்னு நினைக்கறேன். இப்படிச் சொல்லுறதக்காக என்னை நிறையப்பேர் ஏசலாம். ஆனா அப்படி இயக்கச்சார்பா எழுதினா அது போதுமான்னு யோசிக்கணும்…

இதில சோகமான விஷயம் என்னன்னு பார்த்தா தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் பாதிப்பேர் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கே போய்த் தங்கறதில்ல.. பிறகு எப்படி ஈழத்துக்கு, சிங்களத்துக்குப் போக முடியும்… எழுத்தாளர் என்பவர் தூர தேசங்களுக்கு போய் அங்கு என்ன நடக்கிறது என்பதை உலகுதழுவிய நோக்கில் சொல்லவேண்டிய தேவை இருக்கு.. 1961-ஆம் வருஷம் கல்கி இலங்கைக்குப் போனார்னு நினைக்கறேன். அவரோட இலக்கியம் மேல எனக்குப் பெரிசா மதிப்பில்ல, அவர் வலதுசாரித்தனத்தை தந்திரமா நியாயப்படுத்தியவர் வேறே. ஆனா இந்தக்கடமையை சரியா நிறைவேற்றியிருக்காரு.. 1974-ஆம் வருஷம் அசோகமித்திரன் போய் அத எழுதியிருக்காரு.. அந்த சோகத்தை பிற்பாடு வெளியான அவரோட பரானிமாறுங்கற அபூர்வமான குறுநாவல்ல வாசிக்கலாம். பத்திரிகையாளர்ங்கற முறையில ஏ எஸ் பன்னீர்செல்வன் ஈழத்தின் ஓலம்ன்னு தொடர் எழுதினாரு. சிக்கலான போர்க்கால கட்டத்தில் துணிஞ்சு போனதுக்காக அவரைப் பாராட்டணும். ஆனா அது இலக்கியமா மாறியிருக்கணும்.

பத்திரிகையாளர்களைத் தாண்டி உலகுதழுவிய நோக்கில் எழுத்தாளர்கள் போயிருக்கணும், இயக்கச்சார்பில்லாம சாதாரண் ஜனங்களோட போயிருக்கணும். நாலு வருஷம் முன்னாலே எஸ் வி ராஜதுரை அப்படிப் போயிருக்கிறார். அவர் விடுதலைப்புலிகளை ஆதரிக்கக்கூடியவர் என்றாலும் சாதாரண ஜனங்களோட போயிருக்கார்ங்கறதாலே அதைப் பாராட்டணும். ஆனா பெரிய எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள், விமர்சனம் செய்பவர்கள், பீடாதிபதிகள் எல்லாம் இருந்திருக்காங்க, சிலர் மறைந்தும் போயிட்டாங்க. அவர்கள் எல்லாம் கஷ்டங்களை அனுபவித்து வந்து சாதாரண ஜனங்களோட போயிட்டு வந்திருக்கலாமே. ஜெயமோகன் போக முடியலயேன்னு இன்னிக்கு வருத்தப்பட்டு எழுதறாரு. அப்பிடி இயக்கச்சார்பு, ஆதரவு இல்லாம எந்தத் தமிழ்நாட்டு எழுத்தாளர் ஈழத்துக்கு, சிங்களத்துக்குப் பயணம் செய்து பெரிசா, புதுசா எழுதியிருக்காங்க? எது தடுத்தது இவர்களை… பயணத்துக்கு வசதிவாய்ப்பற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி தவறாகக் கூறல்ல… அதாவது போருக்கு நடுவுல ஈழத்தமிழர்கள் தங்கள் சுற்றம், நட்பைப் பார்க்க வேறு வேறு இடங்கள் போயிட்டுத்தானே வாறாங்க. ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் போயிட்டுத்தானே வாறாங்க. தமிழ்நாட்டு எழுத்தாளர்களும் போயிருக்கணும.. போயிருந்தா இனப்பிரிவு என்பதை ஒருகட்டத்தில் கடந்து உலகுதழுவிய நோக்கில் இந்தச்சோகத்தைச் சொல்லியிருக்கலாம். போகலங்கறது பெரிய தவறு. போயிருந்தால் தமிழ்நாட்டு-இந்திய ஊடக உலகத்தின் பார்வையை ஓரளவு மாற்றியிருந்திருக்க முடியும். அதை நாங்க செய்யலங்கறது வெட்கமான விஷயம்.

No comments: