சார்க் மாநாட்டிற்கான பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையம் உபட்ட சில ரயில் நிலையங்களும், கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பாடசாலைகள் மூடப்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையம் ஜூலை 30 ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரையும், கொழும்பு, நீர்கொழும்பு, கட்டுநாயக்க, பேலியகொட, வத்தளை, சீதுவ ஆகிய பகுதிகளிலுள்ள 34 பாடசாலைகள் ஜூலை 26 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 5 ஆம் திகதி வரையும் மூடப்பட்டிருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தெற்கிலிருந்து கொழும்பை நோக்கிவரும் ரயில் வண்டிகள் அனைத்தும் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் எனவும், மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களிலிலுமிருந்து வரும் ரயில் வண்டிகள் மருதானை ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சார்க் மாநாட்டுக்கான பாதுகாப்பைக் காரணம்காட்டி மக்களை வெளியேற்ற எடுத்திருக்கும் நடவடிக்கைகளை கண்டிப்பதாகத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, இதற்கு முன்னரும் இலங்கையில் சார்க் மாநாடு நடத்தப்பட்டிருந்தபோதும், இவ்வாறான கெடுபிடிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் கூறினார். அப்போதெல்லாம் பாடசாலைகளோ ரயில் நிலையங்களோ மூடப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சார்க் மாநாட்டை முன்னிட்டு, கொம்பனிவீதியில் 60 வருடங்களுக்கு மேலாக வசித்துவரும் மக்களை 7 நாட்களுக்குள் வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளதாகவும், ஆனால் அவர்கள் எங்கு சென்று குடியேறுவது என்பது குறித்து எந்த அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை எனவும் கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
சார்க் மாநாட்டிற்காக அரசாங்கம் பாரிய தொகை நிதியினைச் செலவிடுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ரவி கருணாநாயக்க, திறைசேரியிடமிருந்து அரசாங்கம் பெற்றுக்கொண்ட 54 மில்லியன் ரூபாக்களை வீணாகச் செலவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சார்க் மாநாட்டிற்காக இலங்கை வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ரயில் வண்டியில் பயணிக்கப்போவதில்லை எனவும், பாடசாலைகளுக்குச் செல்லப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ள அவர், இருநாள் கூத்துக்காக மக்களின் கோடிக்கணக்கான பணத்தைச் செலவுசெய்து ஏன் இவ்வாறான கெடுபிடிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

No comments:
Post a Comment