Wednesday, 2 July 2008

வெளிநாடு செல்வதற்காக லொட்ஜில் தங்கியிருந்த இரு குழந்தைகளின் தாயார் பொலிஸாரால் கைது

சகோதரியின் அழைப்பை ஏற்று வெளிநாடு செல்வதற்காக தனது இரு பிள்ளைகளுடன் கொழும்பில் தங்கியிருந்த தாயாரும், ஜெர்மனியில் 10 வருடமிருந்துவிட்டு நாடு திரும்பி மறுபடியும் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டு தங்கியிருந்த செவிப்புலன் குறைந்த இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணனிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பை சேர்ந்த இன்பராசா ஹெலன் டயானா (வயது 26) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் விவேகானந்தா மேட்டிலுள்ள ரகுமானியா லொட்ஜிலிருந்து சிவில் உடையில் ஜீப்பில் வந்த ஒரு பெண்ணாலும் நான்கு ஆண்களாலும் அழைத்துச் சென்றதையடுத்து அவர் தற்போது இரகசியப் பொலிஸில் 4 ஆவது மாடியில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக பிரஸ்தாப பெண்ணின் தந்தையான ஆபிரகாம் சாமிநாதன் புகார் செய்துள்ளார். இவரிடம் ஒரே இலக்கமுடைய இரண்டு சிம் இருப்பதாகவும் அதிலொன்று அனுராதபுரத்தில் இன்னொருவரின் பெயரில் இருப்பதாகவும் கிடைத்த புகாரை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டதாக இரகசியப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேபோல தர்மலிங்கம் ரமேஷ்குமார் (வயது 33) என்ற இளைஞர் ஆட்டுப்பட்டி வீதியில் தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்தபோது சோதனை தேடுதல் நடத்திய இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் இவரை கைது செய்து ஆட்டுப்பட்டி வீதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக சகோதரி கே.ராதா தெரிவித்துள்ளார்.

இவர் செவிப்புலன் குறைந்தவர் என்றும் வீட்டுக்கு வெளியிருந்து இராணுவத்தினர் கூப்பிட்டபோது ரமேஸ்குமார் போகாததாலேயே இவரை கைது செய்து கடந்த 15 நாட்களாக தடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்விரு புகார்குறித்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மென்டிஸிடம் பிரதி அமைச்சர் புகார் செய்து தகவல் கோரியுள்ளார்.

No comments: