Sunday, 6 July 2008

மாகாணசபை முறையால் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கமுடியாது- கருணா அம்மான்

மாகாணசபை முறையின் மூலம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். எனினும், 13வது திருத்தச்சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு மாகாணசபை முறையின் மூலம் தீர்வுகாணமுடியாது என்பது தமக்கும் தெரியும் எனவும், அதற்காக, மாகாணசபையில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை வேறுகட்சிக்கு விட்டுக்கொடுக்க முடியாது எனவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் கருணா கூறியுள்ளார். தமது கட்சி சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அடுத்த அமர்வில் கலந்துகொண்டு, 13வது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்தவேண்டுமெனக் கோரிக்கை விடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மாகாணத்தில் காணப்படும் அனைத்து வளங்களையும் மக்கள் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே தமது முக்கிய நோக்கம் எனக் குறிப்பிட்டிருக்கும் கருணா அம்மான், மக்களின் உரிமைகளை வெல்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியுடன் இணைந்தும் செயற்படத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

“முதலமைச்சர் பதவியை நான் ஒருபோதும் விரும்பவில்லை. எனது எதிர்பார்ப்பு அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதே. எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது கட்சி மலையகம் உட்பட ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிடும்” என கருணா அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீளக்குடியமர்த்தப்படாத நிலையில் அங்கு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், இதனால் வாக்குகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டதாக கருணா கூறியுள்ளார். அனைத்து மக்களும் மீளக்குடியமர்த்தப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் கூடுதல் வாக்குகளைத் தமது கட்சி பெற்றிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

தான் நாட்டைவிட்டு வெளியேறியதிலிருந்து கட்சிக்குள் குழப்பநிலை நிலவி வருவதாகவும், 10 சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய செயற்குழுவொன்றை அமைத்து கட்சியை மறுசீரமைக்கவிருப்பதாகவும் கருணா அம்மான் கூறியுள்ளார்.

அத்துடன், தமது உறுப்பினர்கள் சொந்தப் பாதுகாப்புக்காகவே ஆயுதங்களுடன் நடமாடிவருவதாகத் தெரிவித்திருக்கும் கருணா அம்மான், அவர்களை பொலிஸில் இணைந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் கூறினார். 13வது திருத்தச் சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் பொலிஸ் அதிகாரங்களும் பகிரப்படும் என அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

கருணாவின் மீள்வருகை கப்பம் கோரிய கடத்தல்களில் அதிகரிப்பை ஏற்படுத்தும் என அச்சம்

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் வருகையை அடுத்து கொழும்பில் உள்ள வடக்குகிழக்கு மற்றும் ஏனைய தமிழர்கள் மத்தியில் மீண்டும் பாரியளவிலான ஆட்கடத்தல்கள் மற்றும் பணம் பறிப்பு நிகழ்வுகள் நிகழலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கருணா கொழும்பில் இருந்து இயங்கியபோதே பாரியளவிலான கடத்தல்களும் கப்பம் பெறுதல் சம்பவங்களும் இடம்பெற்றன. அவர் பிரித்தாணியாவுக்கு சென்றதன் பின்னர் கப்பம் பெறும் முகமான கடத்தல்கள் குறைந்திருந்ததாக பொதுமக்கள் மத்தியில் கருத்துக்கள் வெளிப்பட்டிருந்தன.


எனினும் சந்தேகத்துக்கு இடமானவர்கள் என கருதப்பட்டு தமிழர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் இன்று வரை குறையவில்லை.

இந்தநிலையில் கருணாவின் வருகை அவர் குடிவரவு குடியகழ்வு சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடு சென்று இலங்கைக்கு திரும்பி வந்தமை திறந்தநிலையில் நடந்தபோதும் அதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எதனையும் எடுக்காமை போன்றவை கருணாவின் வருகையை அரசாங்கம் எதிர்பார்த்திருந்தததாக கருதப்படுகிறது.

எனவே அவரைக்கொண்டு எவ்வளவு பிரயோசனத்தை பெறமுடியுமோ அந்தளவு பிரயோசனத்தை பெறுவதற்கு அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாக எதிர்கட்சி அரசியல்வாதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே குற்றங்களில் இருந்து அவர் தப்பிக்கவேண்டுமானால் அரசாங்கம் எதனை சொல்கிறதோ அதனை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு கருணா ஆட்பட்டுள்ளதாக அந்த அரசியல்வாதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்திலேயே கப்பம் கோரி கடத்தல் நடவடிக்கையை கருணா மீண்டும் ஆரம்பித்து விடுவாரோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுவதாக எதிர்கட்சி அரசியல்வாதி தெரிவித்துள்ளார்.




No comments: