மூதூரில் அக்ஷன்பாம் ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக தனக்கு மரண அச்சுறுத்தல் இருந்ததாலேயே வாக்கு மூலங்களின் போது உண்மைகளைக் கூறவில்லை என்றும்
சரூக் என்ற முன்னாள் இராணுவ வீரர் தானே ஏனைய அக்ஷன்பாம் ஊழியர்களுடன் முஸ்லிம் ஒருவரையும் சுட்டுப் படுகொலை செய்ததாக கூறியதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஊர்காவல் படை வீரர் சாட்சியமளித்துள்ளார்.
அக்ஷன்பாம் ஊழியர்கள் 17 பேர் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூதூரில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இங்கு சாட்சியம் வழங்கிய மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஊர்காவல்படைவீரர் மேலும் தெரிவிக்கையில்;
ஊர்காவல் படைவீரர் ஜகாங்கீர் ஏழாம் இலக்க பங்கரில் கடமையாற்றுகின்றாரென சரச்சந்திர என்ற பொலிஸ் அதிகாரி கூறியது பொய்.
விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு பதில்தாக்குதல் தொடுக்கவே ஜகாங்கீரும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளும் நகரப் பொலிஸ் காவலரணுக்கு வந்திருந்தனர்.
ஏழாம் இலக்க பங்கரில் ஆயுதங்களை தூக்குவதும் காயப்பட்டவர்களை ஜெட்டிக்கு கொண்டு செல்வதுமே எனது கடமையாக இருந்தது.
2006 ஆகஸ்ட் மூன்றாம் திகதியன்று மூதூரில் மோதல்கள் உக்கிரமடைந்த நிலையில், எனது மனைவியை மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர் வரவில்லை.
அதனால் நான்மட்டும் மூதூர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஏழாம் இலக்க பங்கரில் கடமைபுரிந்தேன்.
திருகோணமலையிலிருந்து வந்த இராணுவத்தினரின் கொமாண்டோ அணியினர் அன்றையதினம் மாலை 2.30 மணியளவில் மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர்.
அவர்களில் சிலர் மூதூர் பொலிஸ் நிலையத்திலிருந்த பங்கர்களிலும் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.
அத்துடன், 2006 ஆகஸ்ட் நான்காம்திகதி வரை நான் மூதூர் பொலிஸ் நிலையத்தில் இருந்தபோது அக்ஷன்பாம் ஊழியர்கள் படுகொலை தொடர்பாக அங்கு எவரும் தெரிவிக்கவில்லை.
அதேவேளை, அங்கு வந்திருந்த சரூக் என்ற முன்னாள் ஆமியும் அதைப்பற்றிக் கூறவில்லை. ஆனால், விடுதலைப்புலிகளிடமிருந்து மூதூர் நகரை இராணுவத்தினர் கைப்பற்றுவதற்கு தான்தான் வழிகாட்டியாக இருந்ததாகக் கூறினார்.
2006 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நான் வெளியில் வந்துசம்ஷான் என்ற ஊர்காவல் படைவீரருடன் மூதூர் நகருக்குச் சென்றபோது அக்ஷன் பாம் அலுவலகம் அமைந்துள்ள அப்துல்காசிம் வீதி பிரதான வீதிச் சந்தியில் அக்ஷன் பாம் அலுவலகத்திலிருந்து 50 மீற்றர் தூரத்தில் ஜகாங்கீரும், சிராஜும் ஏழோ எட்டு இராணுவத்தினரும் நின்றிருந்தனர்.
நாம் ஜகாங்கீரை அணுகியபோது அங்குவரவேண்டாம் என்றும் உடனடியாகத் திரும்பிச் செல்லுமாறும் ஜகாங்கீர் எம்மைத் திருப்பி அனுப்பினார்.
ஜகாங்கீர் ஏதோ ஒன்றைச் செய்தபடியால்தான் எம்மை அவ்விடத்தில் நிற்கவிடாமல் துரத்தியிருக்கவேண்டும்.
அதாவது, ஒன்றில் அக்ஷன்பாம் ஊழியர்களின் படுகொலையை அவர் செய்திருக்க வேண்டும். அல்லது கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
ஆனபடியால்தான் ஜகாங்கீர் எம்மைத் துரத்தினார். அவ்வேளையில், ஜகாங்கீரின் கால் அங்கவீனமுற்ற தம்பியும் அவ்விடத்தில் நின்றிருந்தார்.
பின்னர் நாம் திரும்பிச் சென்று அகதி முகாமில் நின்றபோது அங்குவந்த சரூக் ஓரிடத்தில் மோட்டார் சைக்கிள்கள் உண்டு. எடுத்து வருவோமெனக் கூறி அழைத்துச் சென்றார்.
அங்கு சென்றபோது அக்ஷன்பாம் அலுவலக முற்றத்தில் பலரின் உடல்கள் கிடப்பதைக் கண்டேன்.
இந்நிலையில், நான் உள்ளே செல்ல மறுத்தபோது சரூக் எனது தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு உடனே வெளியில் வந்துவிட்டேன்.
ஆனால், சரூக் என்னிடம் அக்ஷன் பாம் ஊழியர்கள் ஏனையோருடன் முஸ்லிம் ஒருவரையும் தான் சுட்டுப் படுகொலை செய்துள்ளதாகக் கூறினார்.
இப்படுகொலைகள் தொடர்பான வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்படும்போது நடந்த உண்மைகளைச் சொல்லக்கூடாதென மரண அச்சுறுத்தல் எனக்கு இருந்தது.
அதனாலேயே உண்மைகளை வாக்குமூலத்தின் போது சொல்லவில்லை. இப்பொழுது ஆணைக்குழு முன்னிலையில் உண்மை கூறுவதற்காகவே வந்துள்ளேன் எனத் தெரிவித்தார்.
Saturday, 5 July 2008
எனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததால் வாக்கு மூலத்தின் போது நான் உண்மை கூறவில்லை--ஊர்காவல்படை வீரர் சாட்சியம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment