Tuesday, 22 July 2008

சார்க் மாநாட்டுக்காக வெவ்வேறு அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு பொறுப்பு கூறுவது யார்? - ரவி கருணாநாயக்க

சார்க் மாநாட்டுக்காக வெவ்வேறு அரச நிறுவங்களுக்கு ஒதுக்கப்படும் பல மில்லியன் ரூபா பணத்துக்கு பொறுப்புக் கூறுவது யார் என்று ஐ.தே.க. வின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சார்க் மாநாட்டு செலவீனங்கள் தொடர்பான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரவி கருணாநாயக்க எம்.பி. மேலும் கூறியதாவது,

இந்த நாட்டிற்கு வெளிநாட்டு கொள்கை என்ற ஒன்று இருக்கின்றதா? சார்க் மாநாட்டுக்காக கோரப்படும் 288 கோடி ரூபா மக்களின் பணத்தை செலவிடுவதற்கே கோரப்படுவதாக நான் கருதுகின்றேன்.

சார்க் மாநாட்டுக்கான ஆயத்தங்களுக்காக பல்வேறு நிறுவனங்களுக்கும் திணைக்களங்களுக்கும் பல மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாக அரசாங்கம் கூறியுள்ளது. இவ்வாறு ஒதுக்கப்படும் பணத்திற்கு கணக்கு காட்டுவது யார்? பொறுப்புக் கூறுவது யார்?

இந்திய படையினரும் பாகிஸ்தான் படையினரும் தமது தலைவர்களை பாதுகாக்க இங்கு வருவார்களென்றால் நாட்டின் இறைமை எங்கே செல்கின்றது.வறுமையை ஒழிப்பதே சார்க் அமைப்பின் நோக்கமாக உள்ளபோது நாட்டின் வறுமையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

சார்க் மாநாட்டை நடத்துவதை நாம் எதிர்க்கவில்லை. மக்கள் வாழ முடியாத நிலையில் இருக்கும்போது பாரிய செலவில் மேற்கொள்ளப்படும் இந்த மாநாட்டில் மக்களுக்கு என்ன பயன் ஏற்படப் போகின்றது என்று கேட்க விரும்புகின்றேன்.

No comments: