Sunday, 20 July 2008

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிப்பீடமேறினால் ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும்: புதினத்துக்கு வழங்கிய பேட்டியில் இல.கணேசன்

இந்தியாவின் மத்திய அரசில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றத்தின் மூலம், தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாரதீய ஜனதா கட்சி ஆட்சிப்பீடமேறினால்,

ஈழத்தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் இம்முறை நடவடிக்கை எடுக்கும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். "புதினம்" இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


பேட்டியின் முழுவிவரம் வருமாறு:

இந்தியாவில் அரசு மாற்றம் ஒன்று ஏற்பட்டால் ஆட்சிக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி, அவ்வாறு ஆட்சிபீடமேறும் பட்சத்தில் - இம்முறை - ஈழத்தமிழர்கள் விடயத்தில் எந்தவிதமான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?


ஏற்கனவே, இது தொடர்பில் வாஜ்பாய் அவர்கள் மிகத்தெளிவாக கருத்து தெரிவித்திருக்கின்றார். இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் இப்போது மறுக்கப்படுகின்றன. அந்த உரிமைகளை தமிழர்களுக்கு வழங்குமாறு சிறிலங்கா அரசைக்கோரும் சகல உரிமைகளும் பாரத அரசுக்கு இருக்கின்றது.


இலங்கையில் தமிழர்கள் படும் அவதியைக்கண்டு, பக்கத்திலிருக்கும் பாரதம் சும்மா இருக்க இயலாது. அங்குள்ள விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்களை மாத்திரம் காரணம் காட்டி, சிறிலங்கா அரசால் தமிழர்கள் படும் அவதியை பாரதம் காணாமல் இருக்கமுடியாது.


"இலங்கையில் தமிழர் படும் அவதியைக் கண்டு பக்கத்திலிருக்கும் பாரதம் சும்மா இருக்க இயலாது"

இப்படியான நிலைப்பாடு ஆட்சிக்கு வரும் முன்னர் - கடந்த தடவையும் - இருந்திருக்கின்றதே தவிர, ஆட்சிக்கு வந்த பின்னர் பாரதீய ஜனதா கட்சி ஈழத்தமிழர்கள் விடயத்தில் எந்தவிதமான உருப்படியான - காத்திரமான -நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையே?

அதற்கு சிறிலங்காவும் ஒரு காரணம். ஒருமுறை இந்திய அரசாங்கம் அதற்கான முயற்சியை மேற்கொண்டபோது, அதற்கு சிறிலங்கா அரசாங்கம் எப்படி நடந்துகொண்டது என்பது உங்களுக்கு தெரியும்.

அங்கு தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக சொல்லிக்கொள்ளும் விடுதலைப் புலிகள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும்.


பாரத நாட்டில் ராஜீவ் காந்தி படுகொலையான பிறகு, சூழ்நிலையில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு மாற்றத்தின் காரணமாக, பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது என்பதும் உங்களுக்குத் தெரியும்.


பின்னடைவு என்று நீங்கள் கருதுவது என்ன? ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர் உங்களால் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க உதவிசெய்ய முடியாதுள்ளது என்று கூறுகின்றீர்களா?


ராஜீவ் காந்தி கொலைக்கு முன்னர், தமிழ்நாட்டிலிருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும்கூட, விடுதலைப் புலிகளைச் சார்ந்தவர்களுக்கே மக்கள் ஆதரவு தந்தார்கள். நானே பார்த்திருக்கின்றேன்.


ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. சாதாரணமாக, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லக்கூடியவர்கள்கூட அது குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்க தயக்கம் காட்டுகின்றனர்.


அப்படியானால், முன்னைய நிலை தற்போது இல்லை என்று கூறுகின்றீர்களா?

ஆம். தற்போது நிலைமை மாறியிருக்கின்றது.


ஆனால், ஆயிரம் காரணமிருந்தாலும், இன்று இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழர்களுக்கான உரிமைகளை - சம உரிமைகளை - பெற்றுக்கொடுக்கவேண்டிய கடமை இந்தியாவுக்கு இருக்கின்றது.


தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவது தொடர்பில், இதுவரை எழுத்திட்ட எந்த ஒப்பந்தத்தையும் சிறிலங்கா அரசு கடைபிடிக்கவே இல்லை. இதுதான் இப்பிரச்சினை இவ்வளவு தூரம் இழுபட்டுக்கொண்டிருப்பதற்கு காரணம்.


இந்த ஒப்பந்தங்களையெல்லாம் சிறிலங்கா அரசு கடைப்பிடித்ததைவிட மீறியதே அதிகமாக இருப்பதால், மேற்கொண்டு இவ்வாறு நடைபெறாமலிருப்பதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டால் மாத்திரம் போதாது. அது கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பதை பார்த்துக்கொள்ளவேண்டிய கடமை இந்தியாவுக்கு இருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.


"தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவது தொடர்பில், இதுவரை எழுத்திட்ட எந்த ஒப்பந்தத்தையும் சிறிலங்கா அரசு கடைப்பிடிக்கவே இல்லை"

ஆட்சிக்கு வரும் உங்களின் பி.ஜே.பி. கூட்டணி அரசின் ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாடு, காங்கிரஸ் அரசினது அணுகுமுறையிலும் பார்க்க எவ்வாறு வேறுபட்டு நிற்கப்போகின்றது?


ஈழத்தமிழர்கள் விடயத்தில் காங்கிரஸ் அரசு ஏன் ஒரு மெத்தனப்போக்கை கடைப்பிடிக்கின்றது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், எமது நாட்டு அரசாங்கம் குறித்து அதிகம் விமர்சனம் செய்ய இப்போது நான் விரும்பவில்லை.


தற்போது ஆட்சியில் இருக்கின்ற கட்சிக்கு எதிர்க்கட்சி என்ற வகையிலும் - தமிழக கட்சி என்ற ரீதியிலும் உங்களின் கருத்தை தெரிவிக்கலாம் இல்லையா?


ஆம். அரசியல் ரீதியாக அவர்களை விமர்சனம் செய்தாலும் கூட ஒரு அந்நிய நாட்டு ஊடகத்தில் எமது நாட்டு அரசு பற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை.

உங்களின் கட்சி உட்பட எந்தக்கட்சியும் ஆட்சிக்கு வருவதற்கு முனனர், சார்பான நிலைப்பாட்டையும், ஆட்சிப்பீடமேறிய பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிவிடுவதாகவும் உள்ளது. அது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?


இங்கு சூழ்நிலை என்பது முக்கியமான விடயம். அன்றுள்ள சூழ்நிலையை பொறுத்துத்தான் அரசாங்கம் முடிவு செய்யும்.


கடந்த தடவை நாம் ஆட்சியிலிருந்தபோது காணப்பட்ட சூழ்நிலை உங்களுக்குத் தெரியும். இப்போது இந்த ஐந்தாண்டுகளில் சூழ்நிலை மாறியிருக்கின்றது.


நிச்சயமாக, ஆட்சிக்கு வரும் எமது அரசு இப்போது இருக்கின்ற சூழ்நிலையை கருத்திற்கொண்டு பணிபுரியும். அப்படி செய்யும்போது, அது இலங்கை தமிழர்களுக்கு சாதகமாகவும், அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதாகவும்தான் அமையும். அந்தவகையில், நான் நிச்சயமாக எனது அரசாங்கத்துக்கு குரல் கொடுப்பேன்.


ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான மத்திய அரசின் கொள்கை வகுப்பில் தமிழகக்கட்சிகள் எவ்வளவு தூரம் செல்வாக்கு செலுத்தக்கூடியதாக உள்ளது?


மத்தியில் இருக்கின்ற கட்சிகளைப் பார்த்தால், இப்போது திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. ஆட்சியில் பங்கேற்றுள்ளனர். இதுபோன்ற கட்சிகள், மத்தியில் உள்ள அரசை வற்புறுத்துவதாக இல்லை. காரணம், ஏற்கனவே இது போன்ற பிரச்சினைகளில் ஈடுபட்டு கையைச் சுட்டுக்கொண்டுள்ளனர்.


காங்கிரஸ் கட்சி இது குறித்து எதுவும் சிந்திப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஆனால், தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை, நாம் இது குறித்து பல்வேறு விதமான கூட்டங்கள், கருத்தரங்குகள், ஆய்வரங்குகள் நடத்திவருகின்றோம். பிரச்சினைகளை தீர்க்கமாக - ஆழ்ந்து - சிந்தித்து
வருகின்றோம்.


மலையக தமிழர்கள், வடக்கு-கிழக்கு தமிழர்கள் எல்லோரின் பிரச்சினைகளையும் ஆராய்ந்து வருகின்றோம். எனவே, எமது புதிய அரசு வரும்போது நிச்சயமாக ஒரு மாற்றம் தெரியும் என கருதுகின்றேன்.


"இலங்கை தமிழர்கள் நல்வாழ்வு விடயத்தில் தமிழக கட்சிகளாகிய எமக்குள் வேறுபாடு உள்ளது என்பது உண்மை"

அப்படியானால், கடந்த தடவை உங்களின் கட்சி கடைப்பிடித்தது போன்று அல்லாமல் - தற்போது காங்கிரஸ் கடைப்பிடிப்பது போன்றும் அல்லாமல் - இம்முறை உங்களின் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஈழத்தமிழர்களுக்கு சார்பான ஒரு போக்கை கடைப்பிடிக்கும் என்று கூறலாமா?



கடந்த தடவை எமது அரசு அப்போதிருந்த சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுத்தது. அதில் எந்த தவறும் இல்லை. இப்போது இருக்கின்ற சூழ்நிலையை ஆராய்ந்து எமது அரசு நடவடிக்கை எடுக்கும். அந்த நடவடிக்கை தமிழர்களுக்கு உரிமைகளை பெற்றுத்தருவதாக அமையும்.



உங்கள் அரசின் அந்த நடவடிக்கை தமிழர்களின் போராட்டத்தை அங்கீகரிப்பதாக அமையுமா?

அது எந்தவகையில் அமையும் என்பதெல்லாம் தற்போது பேசி முடிவு எடுக்கவேண்டியது அல்ல.



எப்படி வருகின்றது என்பது முக்கியமல்ல. எது வருகினறது என்பதுதான் எமக்கு முக்கியம்.



அந்தவகையில், தமிழர்களுக்கு நல்வாழ்வு, அமைதி, அங்கிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தவர்கள் மீண்டும் தாயகம் திரும்பி அங்கே அமைதியாக வாழ்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்குதல் இவைதான் எமக்கு முக்கியம்.



அந்தவகையில், தற்போது தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தமிழக அரசியல் தலைவர்களுடன் இணைந்து எவ்வளவு தூரம் உங்களின் கட்சி பங்காற்றுகின்றது?

எம்மிடம் அவர்கள் வரட்டும் பேசுவோம். இந்த விடயத்தில் எல்லோருமே கருத்தொற்றுமையுடன் இருக்கின்றோம் என்று சொல்ல இயலாது. பல்வேறு கோணங்களில் சிந்திக்கின்றோம்.



இலங்கை தமிழர்கள் நல்வாழ்வு என்று சொன்னாலும்கூட, அதில் எமக்குள் வேறுபாடு உள்ளது என்பது உண்மை.


இனரீதியான பிரச்சினையாக உள்ள ஈழத்தமிழர்கள் விடயத்துக்கு பகிரங்கமாக குரல் கொடுப்பதற்கு உங்களின் கட்சி தவறினாலும் கூட, உங்களின் கட்சி இந்து மதம் சார்ந்த ஒரு மதவாதக்கட்சி என்ற ரீதியில் பார்த்தால், ஈழத்தில் பாதிக்கப்படுகின்ற இந்துக்கள் குறித்தோ அல்லது அங்கு சிறிலங்காப் படைகளால் அழித்தொழிக்கப்படும் ஆலயங்கள் குறித்தோ உங்கள் தரப்பிலிருந்து எந்தக் கண்டனங்களும் வெளிவரவில்லையே?



இது மத ரீதியான பிரச்சினை அல்ல. பாரதீய ஜனதா கட்சி இந்த விடயத்தில் தலையிடவேண்டும் என்பதற்காக இந்துக்கள்தானே தாக்கப்படுகின்றனர் என்று பார்க்கக்கூடாது.


அங்கு பாதிக்கப்படுபவர்கள் இந்துக்கள்தான் என்று போராடுபவர்கள் குரல் கொடுத்திருப்பார்களேயானால், இன்று நாடு தழுவிய பேரெழுச்சி ஏற்பட்டிருக்கும். அதுபோன்று செய்யத்தவறியதால்தான் இப்போது இந்த நிலமை ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது.



ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படும்போது - அவர்களுக்கு எதிராக பாரிய மனித உரிமை மீறல்கள் - மேற்கொள்ளப்படும்போது - அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தயாராக உள்ள நீங்கள், பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு எதிரான அரச அடக்குமுறைக்கு போராட்டம் தீர்வு என்று முடிவெடுத்து போராடுகின்றபோது அதற்கு பகிரங்கமான உங்கள் ஆதரவையோ அல்லது கருத்தையோ ஏன் தெரிவிக்க மறுக்கின்றீர்கள்?



இல்லை. அது குறித்து நான் கருத்துக்கூற விரும்பவில்லை. ஏனெனில், எப்படிப்பட்ட வழியில் விடுதலை கிடைக்கவேண்டும் என்று முடிவு செய்வது அந்த நாட்டு மக்களின் முடிவு. அது குறித்து நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. அவர்களின் முயற்சியை விமர்சனம் செய்யவும் விரும்பவில்லை. எனது கருத்தையும் எனது கட்சியின் கருத்தையும்தான் நான் சொல்லியிருக்கின்றேன் என்றார் அவர்.


இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உத்தேச அணுசக்தி உடன்படிக்கை தொடர்பாக எழுந்த சர்ச்சைகளையடுத்து காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக நாளை செவ்வாய்க்கிழமை இந்திய நாடாளுமன்றம் கூடவுள்ளது.

545 உறுப்பினர்களைக்கொண்ட இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபையான லோக் சபையில் அறுதிப்பெரும்பான்மை பலத்தை அரசாங்கம் தக்கவைத்துக்கொள்ள 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது.


545 உறுப்பினர்களில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஆசனம் வெற்றிடமாக உள்ளது. மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாத சட்டப்பிரச்சினை உள்ளது.


இந்நிலையில் 272 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்துக்கு நாளை தேவைப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: