Wednesday, 9 July 2008

மனிதநேயப் பணியாளர்களின் விசா தொடர்பாக புதிய நெறிமுறையை அறிமுகப்படுத்துகிறது அரசாங்கம்

இலங்கையில் பணிபுரியும் ஐக்கிய நாடுகள் சபையினதும், ஏனைய சர்வதேச மனிதாபிமான நிறுவனங்களினதும் பணியாளர்களுக்கான விசா அனுமதி தொடர்பில் புதிய நெறிமுறைகள் இலங்கை அரசாங்கம் அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த நிறுவனங்களுக்கான நெறிமுறைகளை, அதனுடன் தொடர்புபட்ட ஏனைய அமைச்சுக்களின் ஆலோசனையுடன் அடுத்த வாரம் வெளிவிவகார அமைச்சு வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுக்கும், வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு,

தேச நிர்மாண அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்குமிடையில் கடந்த வாரம் நடைபெற்ற கலந்துரையாடலில் இதுதொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கியிருந்து பணிபுரியும் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் சர்வதேச நிறுவனங்களின் அதிகாரிகள் தொடர்பான முக்கிய விவகாரங்களை தொடர்ந்தும் வெளிவிவகார அமைச்சு கையாளும் எனவும்,

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் தொடர்பான விவகாரங்களை அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகம் கையாளும் எனவும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவால் அமைக்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் தொடர்பான ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில்,

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களுக்கிடையில் இலங்கையில் தங்கியுள்ள மனிதாபிமான நிறுவனங்களின் அதிகாரிகள் தொடர்பான விடங்கள் ஆராயப்பட்டு அவை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,

குறிப்பாக இந்த முன்னெடுப்பை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வரவேற்றுள்ளதாகவும் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு மாதாந்தம் கூடி, மனிதாபிமான உதவிகள் தொடர்பான முக்கிய விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: