Sunday, 6 July 2008

விமானப் படையினரின் சோதனைச்சாவடியினை வாகனத்தால் மோதி சேதப்படுத்திய நால்வர் கைது

கொழும்பு, கொம்பனி வீதியில் அமைந்துள்ள விமானப் படையினருக்குச் சொந்தமான வீதிச் சோதனைச் சாவடியொன்றை வாகனத்தால் மோதிச் சேதப்படுத்திய பெண் ஒருவர் உட்பட நால்வர் விமானப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது கைது செய்யப்பட்ட நால்வரும் கொம்பனிவீதி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமாகிய ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இது குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது

கொம்பனி வீதி பகுதியில் அமைந்துள்ள விமானப் படையினரின் சோதனைச் சாவடியில் கடமையாற்றி வந்த விமானப் படையினர் அப்பகுதியினூடாக அதிவேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றை சோதனையிட முற்பட்டுள்ளனர்.

அதற்காக அச்சோதனைச் சாவடியில் உள்ள விமானப் படையினரால் அவ்வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டப்பட்டுள்ளது. படையினரின் கைசையைக் கவனத்திற் கொள்ளாத குறித்த வான் அச்சோதனைச் சாவடியினையும் மோதிவிட்டு சென்றுள்ளது.



இதனை அடுத்து அங்கிருந்த விமானப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்னரே குறித்த வான் நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் அந்த வானை சோதனையிட்ட படையினர் அதில் பயணித்த பெண்ணொருவர் உட்பட நால்வரை கைது செய்தனர்.

இவர்கள் கைதுசெய்யப்பட்ட போது குடிபோதையில் இருந்ததாக படையினர் தெரிவித்தனர். இதனை அடுத்து அவர்கள் நால்வரும் கொம்பனி வீதி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்கள் நால்வரும் கொழும்பில் அமைந்துள்ள பிரபல சூதாட்டக் கழகம் ஒன்றிலிருந்தே வீடு திரும்பிக் கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது. சம்பவத்தை அடுத்து கைதான நால்வரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த கொம்பனி வீதி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

No comments: