Friday, 25 July 2008

பொருளாதாரத்தைச் சீர்குலைத்த கருணா, பிள்ளையானுக்கு சுங்கச் சட்டத்தையும்மீறிக் குண்டு துளைக்காத வாகன இறக்குமதி

அனைத்தையும் அழித்துவிட்டு அரசியல்தீர்வைக் காண்பதா அல்லது அனைத்தையும் பாதுகாத்துக்கொண்டு அரசியல் தீர்வைக் காண்பதா என்று அரசாங்கம் தீர்மானிக்கவேண்டுமென ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;


போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்தபோது அரசியல் தலைவர்கள் பாதுகாக்கப்பட்டனர். படையினர் பாதுகாக்கப்பட்டனர். பொதுமக்கள் பாதுகாக்கப்பட்டனர். அரச சொத்துக்கள், இலங்கையின் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.


ஆனால் இந்த அரசு போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிய பின்னர் என்ன நடக்கிறது? எத்தனை அமைச்சர்கள், எத்தனை எம்.பி.க்கள், எத்தனை படைவீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், அரச சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.


இந்த அரசாங்கம் குண்டர்களைப் போல் துப்பாக்கிக் கலாசாரத்தை நடத்துகின்றது. எமது படைவீரர்களைக் கொன்ற, பொதுமக்களைப் பலியெடுத்த எமது நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்த கருணா, பிள்ளையான் ஆகியோருக்குச் சுங்கச் சட்டத்தையும்மீறிக் குண்டு துளைக்காத வாகனங்களை இந்த அரசு வழங்கியுள்ளது.


நாடு பூராவும் வெள்ளைவான் கடத்தல் கலாசாரம் பரவியுள்ளது. புத்தளத்தில் மட்டும் இதுவரை 18 பேர் கடத்தப்பட்டுள்ளனர். கொழும்பு, வட கிழக்கிலிருந்து தற்போது இந்த வெள்ளைவான் கடத்தல் நாடு பூராவும் பரவியுள்ளது.


கிழக்கு மாகாணத்தின் நிலை மீண்டும் சிக்கல் நிலைக்குச் சென்றுள்ளது. இது அரசுக்குப் புரியவில்லை. ஆனால் ஏனைய அனைவருக்கும் புரிகின்றது.


இரவு நேரத்தில் பொலிஸ் வாகனங்களில் வெளியே செல்லவேண்டாமென பொலிஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எந்த நேரமும் உஷார் நிலையில் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலுக்குப் பின் இதுவரை 8 பொலிஸார் கிழக்கில் கொல்லப்பட்டுள்ளனர். இது பாதுகாப்பற்ற நிலையென அதிரடிப் படை பொலிஸ் பொறுப்பதிகாரியே குறிப்பிட்டுள்ளார்.

No comments: