வட மாகாண ஆளுநராக ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற இப்பதவிப்பிரமாண நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கையின் 30 ஆவது பொலிஸ்மா அதிபராகப் பதவிவகித்த விக்டர் பெரேரா, 1974 ஆம் ஆண்டு உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்துகொண்டார்.
இதேவேளை, ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படுவது இதுவே வரலாற்றில் முதற்தடவை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதற்கிடையில், விக்டர் பெரேரா வட மாகாண ஆளநராக நியமிக்கப்பட்டமை குறித்து சிவில் சமூகத்தினர் தமது அதிருப்திகளை வெளியிட்டுள்ளனர்.
விக்டர் பெரேரா பொலிஸ்மா அதிபராகப் பதவிவகித்த காலப்பகுதியிலேயே நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்ததாகவும், ஆட்கடத்தல், கப்பம், காணாமல்போதல் சம்பவங்கள் அனைத்தும் இவரது காலத்திலேயே அதிகரித்துக்காணப்பட்டதாகவும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக, இவர் பொலிஸ்மா அதிபராகவிருந்தபோதே, கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் நடைபெற்றதையும் சிவில் சமூகத்தினர் தற்சமயம் சுட்டிக்காட்டுகின்றனர்.
வடக்கில் போர் நடவடிக்கைகள் முழுமூச்சாக முன்னெடுக்கப்பட்டு வரும் இக்காலப்பகுதியில், ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் ஒருவர் அங்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்தும் சிவில் சமூகத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் மீதான பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்திருந்த காலப்பகுதியில் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய விக்டர் பெரேரா, அவற்றைக் கட்டுப்படுத்தத் தவறியிருந்த நிலையில், தற்போது தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணத்தின் ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டிருப்பதை அம்மக்கள் ஏற்றுக்கொள்வார்களா எனவும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கேள்வியெழுப்புகின்றனர்.
அத்துடன் தமிழ் மொழி பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாகாணத்திற்கு தமிழ் மொழி தெரியாத ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதகாவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, ஓய்வுபெறும் பொலிஸ்மா அதிபர்களுக்கு அரசாங்கத்தில் அல்லது தூதரகங்களில் உயர்பதவி வழங்கப்படுவதானது, அவர்கள் பொலிஸ்மா அதிபராகப் பதவிவகிக்கும் காலப்பகுதியில் அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படுவதற்கு தூண்டுதலாக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment