Friday, 25 July 2008

கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பான கட்டுப்பாடு காலத்தை வீணடிக்கும் முயற்சி- ஐக்கிய தேசியக் கட்சி

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சீ.டி.எம்.ஏ. தொலைபேசிகள் தொடர்பாக அரசாங்கம் கொண்டுவரவிருக்கும் புதிய நடைமுறை காலத்தை வீணடிக்கும் செயற்பாடு என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சியடைந்துள்ள நிலையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றம் சீ.டி.எம்.ஏ. தொலைபேசிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் முயற்சிப்பது முட்டாள் தனமானது என்பதுடன், காலத்தை வீணடிக்கும் செயற்பாடு எனவும் அவர் கூறினார்.

சீ.டி.எம்.ஏ. தொலைபேசிகளை வெளியில் எடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் ஏற்படுத்தும் தடையானது தேவையற்றது எனவும், இதனால் கிராம மக்களே பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வருபவர்கள் தம்முடன் சீ.டி.எம்.ஏ.தொலைபேசிகளை எடுத்துவருவதால் தமது உறவினர்களின் வீடுகளை சிரமமின்றி கண்டறிந்துகொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் ஜோசப் மைக்கல் பெரேரா குறிப்பிட்டார்.

கையடக்கத் தொலைபேசிகளை பெருமளவான மக்கள் பயன்படுத்திவரும் நிலையில், பாதுகாப்புத் தரப்பினர் அவற்றைப் பரிசோதிப்பதானால் அவர்களின் முழு நேரமும் தொலைபேசிகளுடனேயே சென்றுவிடுமெனவும், அவர்களால் பாதுகாப்பு வழங்க முடியாது போய்விடும் எனவும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா கூறினார். அரசாங்கத்தின் இந்த முயற்சி பாதுகாப்புப் படையினரின் நேரத்தையும் வீணடிக்கும் ஒரு முயற்சி எனக் கூறினார்.

எனினும், இதற்குப் பதிலளித்த பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, சீ.டி.எம்.ஏ. தொலைபேசிகள் நிலையான தொலைபேசிகளுக்குக் கீழ் வருவதால் அவற்றை செல்லும் இடங்களுக்கு எடுத்துச்செல்ல முடியாது எனவும், கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி இடம்பெறும் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.

போலியான விபரங்களை வழங்கி பெற்றுக்கொள்ளப்படும் பல கையடக்கத்தொலைபேசிகள் குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதால், விசாரணைகளின் போது பாரிய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டி இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

No comments: