Thursday, 24 July 2008

இனப்பிரச்சினை நாட்டின் அரசியல்,சமூக, பொருளாதாரத்தில் படிந்துள்ள ஒரு கறை-மஹிந்த சமரசிங்க

இலங்கையின் இனப்பிரச்சினையானது, நாட்டின் இரு தசாப்த காலங்களுக்கும் மேலான அரசியல், சமூக, பொருளாதாரத் துறையில் படிந்துள்ள கறையாகும் எனக் குறிப்பிட்டுள்ள மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க,

இதன் காரணமாக இலங்கையருக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைக் குறைப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய அனுசரணையாளர்களும் பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற 2008 ஆம் ஆண்டு மனிதாபிமான நிகழ்ச்சித்திட்டங்களுக்கான நிதியிடல் குறித்து ஆராயும்,பொது மனிதாபிமான செயற்திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் நீல் பூனேவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மீளாய்வின் போது இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை முன்னெடுப்பதில் எதிர்நோக்கப்படும் முக்கிய பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2008 ஆம் ஆண்டுக்கான வடக்குக் கிழக்கு மனிதாபிமானப் பணிகளுக்கு 105.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ள அதேநேரம், இதுவரை 84 மில்லியன் டொலர்கள் நிதியிடப்பட்டுள்ளதாகவும் இக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உணவு மற்றும் எரிபொருள் விலையதிகரிப்பு, போக்குவரத்து செலவுகளில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு என்பவற்றின் காரணமாக மொத்த நிதித் தேவையில் 10 வீத அதிகரிப்புக்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

"தற்காலிக தீர்வுகளை நிறுத்தி, மக்களுக்கு சிறந்த வாழ்வையும் உண்மையான எதிர்காலத்தையும் வழங்க விரும்புகிறோம்" என்றும் நீல் பூனே இக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த பொது மனிதாபிமான செயற்திட்டத்தின் மூலம் கடந்த 2007 ஆம் ஆண்டு சுமார் 400,000 இடம்பெயர்நத மக்களின் மனிதாபிமானத் தேவைகளுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டதாகவும் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: