இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்படவுள்ள பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தையும், தொழில் வாய்ப்புக்களையும் முற்றுமுழுதாக இந்தியாவுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கவே இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்று விமல் வீரவன்ஸ எச்சரித்துள்ளார்.
நாட்டுக்குப் பாதகமான இந்த ஒப்பந்தத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு சகல அரசியல் கட்சிகளும் அமைச்சர்களும் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்றுக்காலை (14) பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே விமல் வீரவன்ஸ மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது-
முற்று முழுதாகப் பொருளாதார ஒத்துழைப்பு என்ற ஒப்பந்தம் ஒன்றை இலங்கை அரசு இந்தியாவுடன் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தால் எமது நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படுமே தவிர நன்மை எதுவும் கிட்டாது. இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியர்கள் இலங்கைக்கு வந்து தொழில் வாய்ப்புக்களைப் பெற முடியும்.
அதேபோல் இலங்கையின் பொருளாதாரம் இந்தியாவுக்கு வாரி வாரி வழங்கப்படும். இதன் மூலம் எமது நாட்டவர்களுக்கு இலங்கையில் வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் போகும்.
பொருளாதாரம் சீரழிந்து போகும். உண்மையில் இந்த ஒப்பந்தம் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு நன்மை ஏற்படுமாக இருந்தால் இதை நாம் எதிர்க்கமாட்டோம்.
ஆனால் எந்தவித நன்மையும் எமக்கு இதனால் ஏற்படப்போவதில்லை என்பதுதான் யதார்த்தம் என்றார்.

No comments:
Post a Comment