இலங்கையில் மனித உரிமை மீறல்களை ஆராய சர்வதேச கண்காணிப்புக் குழுவினை நியமிப்பதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி
ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து
ஆராய்வதற்கு குழு நியமிக்கப்பட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.
வட மத்திய சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் கட்சிக்கே ஹெல உறுமய ஆதரவு வழங்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இலங்கையின் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிப்பாளர் குழு இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கக் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளமை குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் அப்பாவி மக்கள் மீது விமானத் தாக்குதல் நடத்துவதாகவும் அமெரிக்க காங்கிரஸின் குற்றச்சாட்டானது எமது நாட்டை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தும் சூழ்ச்சியாகும்.
அத்தோடு சர்வதேச தலையீடுகளை நாட்டுக்குள் அதிகரிக்கச் செய்து தோல்வி கண்டு வரும் விடுதுலைப் புலிகளை பாதுகாக்கும் வியூகமாகும். இந்தக் குற்றச்சாட்டை இலங்கைமீது சுமத்துவதற்கு முன்பு அமெரிக்காவின் புஷ் நிர்வாகத்தின் மீது சுமத்த வேண்டும்.
பயங்கரவாதத்தை ஒழிக்கின்றோமெனக் கூறிக்கொண்டு ஆப்கானிஸ்தான் ஈராக்கிலும் தினம் தினம் அப்பாவி மக்களை அமெரிக்கா கொன்று குவிக்கின்றது.
ஈராக்கில் மட்டும் இது வரையில் 6 இலட்சத்து 50 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலில் 40 அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைப் படையினர் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அப்பாவி மக்களின் இழப்புக்களை பாரிய அளவில் தவிர்த்துக் கொண்டே யுத்த களத்தில் முன்னேறிச் செல்கிறது.
எனவே அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய முதலில் சர்வதேச கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட வேண்டும்.
இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி பொருளாதார தடைகளை அறிவித்து சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தி சர்வதேச நாடுகளின் தலையீடுகளை அதிகரிக்கச் செய்யவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறான செயற்பாடுகளால் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஒட்சிசன் வழங்க அமெரிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது.
மாகாண சபைத் தேர்தல்கள்ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அதாவது அரச தரப்புக்கு வட மத்திய சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களில் ஆதரவு வழங்கவும் பிரசாரம் செய்யவும்,
ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது.படையினர் விடுதலைப் புலிகளுக்கெதிரான வெற்றிகளை பெற்றுக்கொண்டு முன்னேறிச் செல்கின்றனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐ.தே. கட்சியும் ஜே.வி.பி. யும் வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தி படையினரின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுகின்றன.தமது குறுகிய அரசியல் லாபத்துக்காக நாட்டை காட்டிக் கொடுக்கின்றன.
எனவே நாட்டை வெற்றிபெறச் செய்ய வேண்டுமானால் வட மத்திய சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவது அத்தியாவசியமானதாகும்
Friday, 18 July 2008
புஷ்ஷின் மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க வேண்டும்-ஜாதிக ஹெல உறுமய
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment