Saturday, 5 July 2008

கதிர்காமம் முருகன் ஆலய திருவிழா ஆரம்பம் குறைந்தளவு பக்தர்களே கலந்து கொண்டனர்

பிரசித்திபெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த உற்சவம் வியாழக்கிழமை இரவு ஆரம்பமானது.

முருகப் பெருமான் யானையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறு வள்ளியம்மன் ஆலயத்தை நோக்கிச் செல்லும் போது கரகாட்டம் காவடி ஆட்டம் என்பனவும் இடம்பெற்றன.

வள்ளியம்மன் ஆலயத்தில் முருகப்பெருமான் சென்றடைந்ததும் திருக்கல்யாண பூசையும் வழிபாடும் இடம்பெற்று மீண்டும் ஊர்வலம் முருகன் ஆலயத்தை வந்தடைந்தது. இதன்போது வீதியின் இருமருங்கிலும் நின்ற பக்தர்கள் அரோகரா கூறி வழிபட்டனர்.

கதிர்காம திருவிழா ஆரம்பமான இத்தினத்தில் குறைவான பக்தர்களே காணப்பட்டனர். குறிப்பாக தமிழ்ப் பக்தர்கள் மிகவும் குறைவாக வந்திருந்தனர்.

கதிர்காமத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆலயத்துக்கு வருபவர்களின் அடையாள அட்டைகள் , பொதிகள், இராணுவத்தினராலும் , பொலிஸாராலும் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து சிங்கள, தமிழ் பக்தர்கள் வாகனங்கள் மூலம் வந்து தங்கி திருவிழாவில் கலந்துகொண்டனர் என ஆலய நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால், நாட்டின் தற்போதைய பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக தூர இடங்களில் இருந்து குறைவான பக்தர்களே இம்முறை கலந்து கொண்டனர். மட்டக்களப்பில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்களும் ஆரம்ப திருவிழாவில் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் 18 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் 15 ஆம் திகதி தீ மிதிப்புத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

No comments: