* அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் பொருட்களின் விலையுயர்வைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாத அரசு மக்களின் பட்டினிச் சாவைத் தான் விரைவில் சந்திக்க நேரிடும் என்று உடுநுவர பிரதேச சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எஸ்.எம்.ஹலீம் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற உடுநுவர பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வடைந்துள்ள போதிலும் தெற்காசியாவின் ஏனைய நாடுகளை விடவும் இலங்கையில் பொருட்கள் சேவைகளின் விலை அதிகரிப்பு வேகம் அதிகமாயுள்ளது. இதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டியது அரசின் பொறுப்பாகும். நாட்டில் பொருளாதார வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் புள்ளி விபரங்கள் மூலம் காட்டினாலும், பொருட்களின் விலையுயர்வினால், வாடும் மக்களின் துன்பங்களைப் புள்ளிவிபரங்களால் வெளிப்படுத்த முடியாது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெறவில்லை. இதனால், கிழக்கு வாழ் முஸ்லிம்கள் மட்டுமல்ல தமிழ் மக்களும் ஏமாற்றமடைந்துள்ளனர். ஜனநாயகத்திற்கு வேட்டு வைக்கும் வகையில் தேர்தல்கள் நடைபெறக் கூடாது. ஐக்கிய தேசிய கட்சி நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலொன்றின் மூலம் வெற்றி பெறும். ஐக்கிய தேசிய கட்சி கிழக்கில் தோல்வியுற்றதாக எண்ணுவோரின் கணக்கு பிழைத்துப் போகும் காலம் தொலைவில் இல்லை என்றார். டட்லி அமரசிங்க (ஐ.தே.க.) உரையாற்றிய போது கூறியதாவது; மக்கள் போக்குவரத்துச் செலவின் அதிகரிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நகர்ப்புறங்களுக்கு வரும் கிராமப்புற மக்கள் குறைந்துள்ளனர். நகரங்களில் வியாபார நடவடிக்கைகள் மந்த கதியில் நடைபெறுகின்றன என்றார்.
Saturday, 5 July 2008
பொருட்களின் விலையுயர்வினால் மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்க வேண்டிய அபாயம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment