Wednesday, 23 July 2008

வெளிநாடுகள், அரசியல் கட்சிகளின் தேவைக்காக திட்டங்களை வகுக்கமுடியாது - ஜனாதிபதி

குடிமக்களின் அபிலாசைகளுக்கு இணங்கவே அரசாங்கம் திட்டங்களை மேற்கொள்ளவேண்டும். இதனை விடுத்து வெளிநாடுகளினதோ அல்லது அரசியல் கட்சிகளினதோ தேவைக்காக திட்டங்களை வகுக்க முடியாது என்று ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.


நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற மாமிச உணவு உற்பத்திபொருள் ஏற்றுமதியாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது: 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பிற்பாட்டிலிருந்து 2008 வரை இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும்.

பொருட்களுக்கான ஜி.எஸ். பி பிளஸ் வரிவிலக்கினை பெற்றுக்கொள்வதற்கு அப்பொருட்களை விலைக்கு வாங்கும் நாடுகளின் இணக்கத்திற்கு இணங்க வரிவிலக்கினை மேலும் 3 வருடங்களுக்கு நீடிக்க அரசு தீர்மானித்துள்ளது.

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இலங்கைக்கு கிடைக்காமல் செய்து அரசை கவிழ்ப்பதற்கான முயற்சிகளில் சில தரப்பினர் ஈடுபட்டுள்தாகவும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு கொடுக்கப்படக்கூடாது என்ற வேண்டுகோளை அவர்கள் சர்வதேச மட்டத்தில் விடுப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

நாடொன்றுக்கு கிடைக்கும் நிவாரணமானது ஒரு நபருக்கோ அல்லது அரசாங்கத்துக்கு மட்டும் கிடைக்கும் நிவாரணம் அல்ல. அது நாட்டில்வாழும் அனைத்து மக்களுக்குமான நிவாரணமாகும்.

இலங்கையை பற்றி தவறான பிரசாரங்களில் ஈடுபடும் நம்மவர்களில் சிலர் இதன் மூலமாக இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முனைவதுடன் அது முழு இலங்கையரையும் பாதிக்கக்கூடிய செயலாகும். இன்று நாமனைவரும் முதலில் நாட்டை பற்றி சிந்தித்தே தீர்மானம் எடுக்கவேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.

எனது பதவி காலத்தில் எச்சந்தர்ப்பத்திலும் இந்நாட்டுக்கு கிடைக்கும் நிதி உதவியோ நிவாரணத்தேயோ இல்லாமற் செய்ய மாட்டேன்.

இச் சந்திப்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டீ சில்வா, பீலிக்ஸ் பெரேரா, நியோமால் பெரேரா, ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயாலளர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, மீனவ அமைச்சின் செயலாளர் பியசேன உட்பட மாமிச உற்பத்தி ஏற்றுமதியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments: