சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுவின் தலைவர் பிள்ளையானுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்தே லண்டனிலிருந்து கருணா மீண்டும் சிறிலங்காவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்
என்றும் இதன் பின்னணியில் சிறிலங்கா அரசின் பல திட்டங்கள் ஒழிந்துள்ளன என்றும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது.
இவை தொடர்பாக தெரியவருவதாவது:
கிழக்கு கள நிலைமைகளில் கைதேர்ந்தவர் என்ற நம்பிக்கையுடனும் தமது உத்தரவுகளுக்கு கட்டுப்படுபவராக இருப்பார் என்ற எண்ணத்துடனும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக சிறிலங்கா அரசால் நியமிக்கப்பட்ட பிள்ளையான், பதவியைப்பெற்றவுடன் தனது நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தனக்கு ஏகபோக அதிகாரம் அளிக்கப்பட்டு அது தொடர்பான நிதி விவகாரங்களையும் தானே கையாளப்போவதாக அரசுக்கு அறிவித்திருக்கிறார்.
இது சிறிலங்கா அரசின் எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் பாரிய அடியாகிவிட்டது.
அதேவேளை, சிறிலங்கா அரசின் இன்னொரு மிக முக்கியமான கோரிக்கைக்கு பிள்ளையான் மறுப்பு தெரிவித்தமை அரசுக்கு பிள்ளையான் மீது கடும் சீற்றத்தை உண்டு பண்ணியுள்ளது.
அதாவது, சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிக்கு பிள்ளையான் குழுவில் உள்ள இருநூறு பேரை அரசு கோரியிருந்தது.
இதற்கு மறுப்புத் தெரிவித்த பிள்ளையான், கிழக்கு அபிவிருத்திக்காகவே தனது குழு முழுமையாக செயற்படுமே தவிர, விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடவோ வடக்கு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவே மாட்டாது என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கூறிவிட்டார்.
இது விடயத்தை நேரடியாகக் கையாண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபாய ராஜபக்சவுக்கு பிள்ளையானின் நடவடிக்கைகள் சந்தேகத்தை உண்டு பண்ணின. இதை அடுத்து, விடுதலைப் புலிகளின் கையாளாக பிள்ளையான் செயற்படுகிறாரா என்ற சந்தேகம் அரசு தரப்புக்கு ஏற்பட்டது.
"புலிகளுக்கு பாடம் கற்பிக்க கருணாவைப் பிரித்து, பின்னர் கருணாவுக்குப் பாடம் புகட்ட பிள்ளையானைப் பிரித்து காரியங்களை ஒப்பேற்றிவிட, தற்போது அரசுக்கே பிள்ளையான் ஆட்டம் காட்டுகிறாரோ? இவருக்கு பாடம் கற்பிக்க திரும்பவும் கருணாவை கூப்பிடுகிறேன் பார்" என்று சீறிய கோத்தாபாய ராஜபக்ச மேற்கொண்ட நடவடிக்கையே கருணாவை மீள அழைத்த நாடகம்.
தற்போது, நாடு திரும்பியுள்ள கருணாவை வைத்து, இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிக்கு ஆட்களை திரட்டுவதே அரசின் பிரதான நோக்கமாகவுள்ளது.
அம்பாறை மற்றும் கிழக்கின் இதர பகுதிகளில் உள்ள கருணாவின் குழுவினரை ஆழ ஊடுருவும் அணிக்கு திரட்டும் நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிக்குமாறு கருணாவுக்கு அரசு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கில் வாகரைப் பகுதியில் மாவீரர் துயிலும் இல்லத்தை முன்னர் படையினர் இடிக்கும்போது கருணா, அது விடயத்தில் மௌனம் சாதித்தமை முதல் பலவிடயங்கள், தாம் என்ன சொன்னாலும் செய்வார் என்ற நம்பிக்கையை கருணா மீது சிறிலங்கா அரசுக்கு ஏற்படுத்தியிருந்தது.
ஆகவே, தற்போது தாம் மேற்கொண்டுள்ள இந்த ஆழ ஊடுருவும் அணிக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைக்கும் கருணா நிச்சயம் உதவுவார் என்று அரச திடமாக நம்புகிறது.
அரசின் இந்த திட்டத்தின்படி, மன்னார் பகுதியில் கருணாவை நிலைநிறுத்தி அங்கிருந்து அவரை செயற்படுத்த திட்டமிட்டிருக்கிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:
Post a Comment