Monday, 7 July 2008

ஜனாதிபதி ஆணைக்குழு முன் பொய்கூறுமாறு ஊர்காவல் வீரர் ஜகாங்கீர் என்னை மிரட்டினார்

* மற்றொரு ஊர்காவலர் சாட்சியம்

யோ.நிமல்ராஜ்

மூதூர் அக்ஷன்பாம் ஊழியர்கள் படுகொலைகள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னால் பொய்கூறுமாறு ஊர்காவல் படைவீரர் ஜகாங்கீர் என்னை மிரட்டியிருந்தாரெனக் கூறிய சாட்சி ஒருவர் இப்படுகொலைகள் தொடர்பான உண்மைகளை மறைக்க முடியாதென்றும் அது தானாகவே வெளிவருமென்றும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேரில் கூறியுள்ளார்.

மூதூரில் அக்ஷன்பாம் அலுவலர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நடத்தப்படுகிறது.

இங்கு நான்காவது நாளாக சாட்சியமளித்த மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஊர்காவல் படைவீரர் மேலும் தெரிவிக்கையில்;

மூதூர் அப்துல் காசிம் வீதியில் அமைந்துள்ள அக்ஷன்பாம் அலுவலகத்திலிருந்து ஆமி ஷரூக்கின் கட்டாயத்தின் பேரில் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நடுத்தீவுவரை உருட்டிச் சென்றேன்.

மோட்டார் சைக்கிளின் திறப்பு இல்லாத காரணத்தினால்தான் நடுத்தீவு வரை உருட்டிச் சென்றேன். ஆனால் மோட்டார் சைக்கிளின் கான்டில் பூட்டப்பட்டிருக்கவில்லை.

இந்த ஆணைக்குழு முன்னால் வரும்வரை எனக்கு உயிரச்சுறுத்தல்கள் இருந்தன. எனது பாதுகாப்பு தொடர்பில் ஆணைக்குழு உறுதியளித்த பின்னரே நடந்த உண்மைகளைக் கூறுகின்றேன்.

இதற்கு முன்னால் என்னால் வழங்கப்பட்டிருந்த வாக்குமூலங்களில் எல்லாம் உண்மைக்கு புறம்பான விடயங்களே கூறப்பட்டன.

அதேபோல உண்மைகளைக் கூறக்கூடிய நிலையில் நான் இல்லாததாலேயே மூதூர் பொலிஸ் நிலையத்திலும் நடந்த உண்மைகளைக் கூறவில்லை.

அக்ஷன்பாம் அலுவலகத்தில் நான் துப்பாக்கி முனையிலேயே மோட்டார் சைக்கிளை எடுத்தேன் என்பதற்கு சாட்சிகள் உண்டு. அவர்களிடமும் இது தொடர்பான விசாரணைகளை நடத்தவேண்டும்.

அக்ஷன்பாம் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டினை உடைக்குமாறும் இராணுவ வீரர் ஷரூக்தான் கூறினார்.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் திகதிதான் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை ஒப்படைத்தேன்.

அத்துடன் பொலிஸார் என்னைக் கைது செய்யவும் இல்லை. நானாகத்தான் பொலிஸிடம் சென்று சரணடைந்தேன்.

இவற்றையெல்லாம், அதாவது நடந்த உண்மைகளை வெளியில் சொல்லவேண்டாம் என்றும், சொன்னால் என்னையும் எனது குடும்பத்தினரையும் கொலை செய்துஅழித்து விடுவதாகவும் இராணுவ வீரர் ஷரூக் என்னை மிரட்டியிருந்தார்.

இதன் காரணத்தினாலேயே குறிப்பிட்ட காலப்பகுதியில் நடந்த உண்மைகளை நான் கூறவில்லை.

எனக்கு மனைவியும் பிள்ளைகளும் உள்ளனர். நான் அவர்களுடன் நிம்மதியாக, சந்தோஷமாக வாழவேண்டும் என்ற காரணங்களினாலேயே உண்மைகளை மறைத்தேன். உண்மைகளை அன்றே கூறியிருந்தால் ஷரூக் எம்மை சுட்டுக் கொலை செய்திருப்பார்.

நான் இனிமேல் மூதூருக்கு போகமாட்டேன். எனக்கு அங்கு பாதுகாப்பு இல்லை.

இராணுவவீரர் ஷரூக்கின் உயிரச்சுறுத்தல் காரணமாகத்தான் உண்மைகளைக் கூறவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் நான் இன்று உயிருடன் இருந்திருக்கமாட்டேன்.

அதேவேளை ஊர்காவல் படைவீரர் ஜகாங்கீரும் ஆணைக்குழு முன்னிலையில் நடந்த உண்மைகளைக் கூறவேண்டாம் என்று என்னை மிரட்டியிருந்தார்.

அதேவேளை ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆறாம் திகதி வரை மூதூர் பொலிஸ் நிலையத்தின் நான்காம் இலக்க பங்கரில்தான் கடமையாற்றியதாக கூறுமாறும் வற்புறுத்தியிருந்தார். அத்துடன் நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேளை எனது வீட்டிற்குச் சென்று எனது மனைவியை மிரட்டியதுடன் என்னை கொன்றுவிடுவதாகவும் மனைவியை வேறு திருமணம் செய்யுமாறும் வற்புறுத்தியிருந்தார்.

அதேவேளை சக ஊர்காவல் படைவீரர் ரம்ஷானையும் ஜகாங்கீர் பொய்ச் சாட்சியம் கூறுமாறும் வற்புறுத்தியிருந்தார்.

மூதூர் பொலிஸ் நிலையத்திலிருந்து ஜகாங்கீரும் சிராஜ் மற்றும் அனீஷ?ம் இராணுவத்தின் கொமாண்டோ அணியினருடன் சென்றது உண்மை. அது அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள், ஊர்காவல் படைவீரர்கள் அனைவருக்கும் தெரியும்.

நடந்த உண்மைகளை ஒருபோதும் மறைக்க முடியாது. அது தானாகவே என்றோ ஒருநாள் வெளிவருமெனத் தெரிவித்தார்.

இந்நிலையில் சாட்சியை குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்த இராணுவத்தரப்பு சட்டத்தரணி கொமின் தயாசிறி;

உமது நிலை மாறுபட்டதாகவுள்ளதெனவும் ஒன்றுக்குப்பின் முரணான கருத்துக்களைக் கூறுவதாகவும் மோட்டார் சைக்கிளை நீர் வேணுமென்றே திருடிச் சென்றுள்ளீரென்றும் கேட்டார்.

இக்கேள்விக்கு சாட்சி தொடர்ந்து பதிலளிக்கையில்;

நான் இப்பொழுதுதான் சரியான நிலைப்பாட்டிற்கு வந்துள்ளேன். எனக்கு எவர் மீதும் எந்தவிதமான வெறுப்பும் இல்லை.

நடந்த உண்மைகளை மாத்திரமே இங்குநான் கூறுகின்றேன். இனி நான் எவருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை, பயமடையவும் மாட்டேன். ஜகாங்கீர் இங்கு என்னை பொய்ச்சாட்சி கூறுமாறு வற்புறுத்தியிருந்தார். ஆனால் நான் உண்மைகளை மாத்திரமே கூறுகின்றேன்.

நான் மோட்டார் சைக்கிளை எடுத்ததை நம்பாத நீங்கள் ஏன் மற்ற விடயங்கள் தொடர்பாக கேள்வி கேட்கின்றீர்கள். அதனை நம்பாத நீங்கள் இதனை மட்டும் எப்படி நம்புவீர்களென சட்டத்தரணி கொமின் தயாசிறியைக் கேட்டார்.

மேலும் என்னை எவ்வாறான கேள்விகளாலும் மடக்க முடியாது. நடந்த உண்மைகளை மாத்திரமே கூறுவேன்.

இராணுவ வீரர் ஷரூக்கையும் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் கொண்டு வந்து விசாரணைகளை நடத்த வேண்டும்.

நான் எந்த விதத்திலும் குற்றவாளி அல்லன். அதனால் எனது பறிபோன வேலையையும் ஆணைக்குழு திரும்ப பெற்றுத் தர வேண்டுமெனத் தெரிவித்தார்.

No comments: