Thursday, 10 July 2008

'சிங்கத்திடம் அரசியல் உரிமையையும், புலியிடம் ஜனநாயக உரிமையையும் வெற்றிகொள்ளவேண்டும்'- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

சிங்கத்திடமிருந்து அரசியல் உரிமையையும், புலியிடமிருந்து ஜனநாயக உரிமையையும் வெற்றிகொள்ளவேண்டிய தேவை தமிழர்களுக்கு இருப்பதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சரும், ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அரசாங்கம் ஒன்றை ஆட்சியில் அமர்த்துவதற்குத் தமிழ் மக்களின் வாக்குகள் அத்தியாவசியமானவை எனவும், அதேபோல ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்கு முக்கியமானது

எனவும் கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குறிப்பிட்டிருக்கும் அமைச்சர், அவற்றின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஜனநாயக ரீதியாகத் தீர்த்துவைக்கமுடியும் எனக் கூறியுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் மூன்று கட்டமாகத் தீர்க்கப்படவேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே தமது கட்சி நீண்டகாலமாக இருந்துவருவதாகவும், இதில் இரண்டு கட்டங்கள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை-இந்திய சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு முன்னர் இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தேசியவாதக் கொள்கையுடன் இருந்தபோதும், அந்த உடன்படிக்கையின் பின்னர் அனைத்தும் மாற்றம்பெற்றதாகவும், எனினும், நல்லதொரு சந்தர்ப்பத்தை தமிழ் தலைமைகள் பயன்படுத்தத் தவறியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதிகாரங்கள் தேசிய ரீதியில் அல்லது மாகாண ரீதியில் பகிரப்படவேண்டும் என்பது தமது நிலைப்பாடு எனக் குறிப்பிட்ட அமைச்சர், ஒரு சமூகம் மற்றைய சமூகத்தின் மொழியை அறிந்துவைத்திருப்பதன் மூலம் மொழிப் பிரச்சினையைத் தீர்க்கமுடியும் எனக் கூறினார்.

குறிப்பாகத் தமிழ் மக்கள் தற்பொழுது பல மொழிகளை அறிந்துகொள்ளக் கூடிய சூழ்நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன், ஒருவரை அவருடைய சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு இனம்காணுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும்,

அனைவரும் இலங்கையர் என்ற தேசிய இனத்தைக் கொண்டிருக்கவேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார். குடிவரவுத் திணைக்களத்தால் விமானநிலையத்தில் வழங்கப்படும் விண்ணப்பப்படிவத்தில் தேசிய இனம் தொடர்பான கேள்வியுள்ள பகுதியில் ‘தமிழர்’ என்ற இனம் குறிப்பிடப்பட்டிருந்ததை அவதானித்ததாகவும்,

இது குறித்துக் கவலையடைவதுடன், இதனை நீக்குவது தொடர்பாக அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவிருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் மேலும் கூறியிருந்தார்.


No comments: