Friday, 11 July 2008

போர் நிறுத்தத்திற்கும் சமாதானப் பேச்சுக்கும் தயார்-புலிகள் அறிவிப்பு

வடக்கில் பலமான படைநர்வை இலங்கை இராணுவம் முன்னெடுத்திருக்கின்ற நிலையில், இலங்கை அரசாங்கத்துடன் போர்நிறுத்தத்திற்கும், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் தாம் தயாராகவிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இந்தியாவின் 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சிக்கு தொலைபேசி வழியாக வழங்கிய செவ்வியிலேயே விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 6 வருடங்களாக அமுலிலிருந்த போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசாங்கமே இந்த வருட ஆரம்பத்தில் ஒருதலைப்பட்சமாக வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் ஒரு போதும் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரானவர்களல்ல எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், மீண்டும் போர்நிறுத்த உடன்படிக்கைக்குச் செல்வதற்கு தாம் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

"போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசாங்கமே ஒருதலைப்பட்சமாக வெளியேறியதுடன், தமிழர்கள் மீதும், தமிழர் தாயகத்தின்மீதும் போரினைப் பிரகடனப்படுத்தியுள்ளது" என்றும் நடேசன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள நளினியை விடுதலை செய்யுமாறு மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளமை குறித்து அந்த ஊடகம் கருத்துக் கேட்டதற்கு, தமிழ் மக்களின் சட்டரீதியான கோரிக்கைகளுக்கும், அவர்களின் சுதந்திரப் போராட்டத்திற்கும் இந்தியாவிடமிருந்து அங்கீகாரம் கிடைக்கும் எனவும், அதன்மூலம் முழுமையான மாற்றம் ஏற்படும் எனவும் விடுதலைப் புலிகள் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நளினி விடுதலை செய்யப்படுவாரானால் அது முழுமையான மாற்றத்தின் முதற்படியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: