Monday, 12 May 2008

கடற்புலிகளினால் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் மீட்கப்படுகிறது

கடந்த சனிக்கிழமை திருகோணமலை அஷ்ரப் இறங்குதுறையில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் தற்கொலைக் குண்டுதாரியாலேயே வெடிக்கவைக்கப்பட்டிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

கடற்படையின் சுழியோடிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீருக்கடியிலிருந்து வெடித்த மனிதச் சடலத்தின் பகுதிகளை மீட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். “தற்கொலைக் குண்டுதாரியின் உடல் சடலங்களையும், நீருக்கடியில் செல்வதற்கான சாதனங்களையும் எமது சுழியோடிகள் மீட்டுள்ளனர்” என கடற்படைப் பேச்சாளர் கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார்.

கப்பலின் வடமூலையில் தாக்குதலினால் பாரிய துளையொன்று ஏற்பட்டு நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக கடற்படை உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தற்கொலைக் குண்டுதாரி தற்கொலை அங்கியைப் பயன்படுத்தியதால் உடலின் பெரும்பகுதி காணாமல் போயிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது. மூழ்கடிக்கப்பட்ட கப்பலை மீட்பதற்கு கடற்படை சுழியோடிகள் முயற்சி மேற்கொண்டிருப்பதுடன், அந்தப் பகுதி மிகவும் ஆழமானது இல்லையென்பதால குறுகிய காலத்தில் கப்பலை மீட்டுவிட முடியும் என கடற்படைப் பேச்சாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் திருகோணமலை அஷ்ரப் இறங்குதுறையில் தரித்துநின்ற கடற்படையினரின் சரக்குக் கப்பலொன்றை விடுதலைப் புலிகள் தாக்கியழித்திருந்தனர். கடற்கரும்புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக விடுதலைப் புலிகளின் அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

ttpian said...

ship is suffering from fever:therfore,I request you to kindly give 5 days leave for Navy Cheap-sorry chief!
I would like to know,I am a scrap merchant and i am willing to buy the broken ship for datefruit or onion;some one please tell mahindha to contact me!

Anonymous said...

I will sell Mahinda a great ship if he sell me the wreckage for 100 bags of rice
anslam