கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டிருந்தது என்பதை ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆதாரத்துடன் வெளியிடும் என முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். "அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குத் தோல்வி ஏற்படுமென அரசாங்கத்தின் தேர்தல் தொடர்பான ஆய்வாளர்கள் கூட தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தனர். என்னுடன் கதைத்த அரசாங்க அமைச்சர்கள் பலர் அம்பாறை மாவட்டத்தைத் தாம் இழக்கப்போகிறோம் எனக் கூறியிருந்தனர். இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அனைத்துச் சட்டங்களையும் மீறி கிழக்கு மாகாண மக்கள் தம்மை ஆள்வதற்கான கட்சியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மீறப்பட்டுள்ளது" என ஹக்கீம் குறிப்பிட்டார்.
"இவ்வாறிருந்த போதும் கிழக்கு மாகாண மக்கள் அரசாங்க அமைச்சர்களால் ஏற்படுத்தப்பட்ட வன்முறைகளைக் குறைத்ததுடன், வன்முறைகளுக்கு எதிராகப் போராடி வாக்களித்துள்ளனர். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழ் மக்களின் வாக்குகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி அரசாங்கம் தானாகவே நிரப்பிக்கொண்டது" என முஸ்லிம் காங்கிரசின் தலைவர் குற்றஞ்சாட்டினார்.
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளில் அரசாங்க அமைச்சர்களால் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களைத் தடுத்து பதில் நடவடிக்கை எடுத்த வாக்காளர்களுக்குத் தலைவணங்குவதாக ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிள்ளையான் தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார் என்பதற்கான போதியளவு ஆதாரங்கள் இருப்பதாகவும், இதனை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து விரைவில் வெளிப்படுத்த இருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியுள்ளார்.
Monday, 12 May 2008
தேர்தல் வன்முறைகளை விரைவில் அம்பலமாக்குவோம்- ரவூப் ஹக்கீம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment