விமல் வீரவன்ச உருவாக்கியிருக்கும் புதிய அரசியல் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியைப் பதிவுசெய்வதற்கான சட்ட ஆவணங்கள் தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஜே.வி.பி.யின் தலைமைப்பீடத்துடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட 10 பேர் கட்சியிலிருந்து பிரிந்து சுதந்திரமாக செயற்படுவதற்குத் தீர்மானித்தனர்.
இவர்கள் இணைந்து புதிய கட்சியை ஏற்படுத்துவதற்குத் தீர்மானித்தனர். இது தொடர்பாக ஏற்கனவே சுயாதீனமாகச் செயற்பட்டுவந்த பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலகவுக்கும், விமல் வீரவன்சவுக்கும் இடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. கிழக்கு மாகாணசபைத் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் புதிய கட்சியைப் பதிவுசெய்வதற்கு இவர்கள் தீர்மானித்திருந்தனர்.
இந்தத் தீர்மானத்துக்கமைய தேசிய சுதந்திர முன்னணி எனும் பெயரில் கட்சியைப் பதிவுசெய்வதற்கான ஆவணங்களை அவர்கள் தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளனர். கட்சியின் நிறம் பொன் நிறம் எனவும், சின்னம் கிரீடம் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தக் கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச, கட்சியின் செயலாளராக நந்தன குணதிலகவும், செயலாளராக டீபால் குணசேகரவும், தேசிய ஒருங்கிணைப்பாளராக கமல் தேசப்பிரிய மன்னம்பெருமவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்தப் புதிய கட்சியின் உத்தியோகபூர்வமான அங்குரார்ப்பணம் எதிர்வரும் 14ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment