புகையிரதத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியையும் சோதனைக்கு உட்படுத்தி 100 வீத பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குவது சாத்தியமற்றது எனத் தெரிவித்திருக்கும் புகையிரதத் திணைக்களத்தின் பொது முகாமையாளர் லலிதசிறி குணறுவான், பயணிகள் வழிப்புடன் இருக்கவேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இராணுவத்தினர், பொலிஸார் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் பொதுமக்களும் விழிப்புடன் இருப்பது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். அனைத்து புகையிரதநிலையங்களிலும் பாதுகாப்புப் படையினரை நியமித்து 100 வீத பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சாத்தியமற்றது என அவர் தெரிவித்தார்.
“ஒவ்வொரு புகையிரதநிலையத்திலும், ஒவ்வொரு பயணியாக சோதனைக்கு உட்படுத்துவது இயலாதகாரியம். பலர் புகையிரதத்துக்குள் ஏறுவார்கள், இறங்குவார்கள். நீளமான சில புகையிரதங்களுடன் ஒப்பிடும்போது, புகையிரதமேடைத்தளங்கள் சிறியவையாக இருக்கின்றன. இதனால், பலர் மேடைத்தளங்களுக்கு அப்பால் சென்றும் ஏறுகின்றனர். அவ்வாறு ஏறுபவர்கள் அனைவரையும் குறுகிய நேரத்துக்குள் பரிசோதனைக்கு உட்படுத்துவது சாத்தியமற்றது. பொதுமக்கள் அவர்களைச் சுற்றி என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி விழிப்புடன் இருப்பது அவசியம்” என குணறுவான் கூறினார்.
தென்பகுதிக்கான அனைத்துக் கரையோர புகையிரதநிலையங்களையும் வெள்ளவத்தைக்கும், கல்கிஸ்சைக்கும் இடையிலான பகுதியில் ஒரு தண்டவாளத்தில் பயணிப்பதற்கான விசேட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக புகையிரதத்திணைக்கள பொது முகாமையாளர் லலிதசிறி குணறுவான் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தெஹிவளை புகையிரதநிலையத்துக்கு அண்மையில் புகையிரதத்துக்குள் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் எல்.சி.குணவர்த்தன மற்றும் தெஹிவளைப் பொலிஸ்நிலையப் பெறுப்பதிகாரி ரஞ்சித் கொட்டஹச்சி தலைமையில் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முடுக்கிவிடப்பட்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 70ற்கும் அதிகமானவர்கள் களுபோவில மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் கிசிக்சைபெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment