தென்பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிறிஸ்தவ மதகுருமார் கிளிநொச்சி சென்று மடு தேவாலயப் பகுதியை மோதல் இல்லாத புனித பிரதேசமாகப் பேணுமாறு விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து மடு மாதாவின் திருச்சொரூபம் தேவன்பிட்டிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இராணுவத்தினர் மடு தேவாலயப் பகுதியைக் கைப்பற்றியுள்ள போதும் அங்கு காணப்படும் கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே நிர்வாகத்திடம் கையளிப்பதற்கு இணங்கியுள்ளனர்.
இந்த நிலையில், மடு தேவாலயப் பகுதியை புனித பிரதேசமாக மதிக்குமாறு விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுப்பதற்கு தென்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ மதகுருமார்கள் கிளிநொச்சி செல்வதற்கு ஏற்பாடாகியுள்ளது.
மடுமாதா தேவாலயப் பகுதியைப் புனித பிரதேசமாக மதித்து அதனைச் சூழவுள்ள 2.5 கிலோ மீற்றர் பகுதியிலிருந்து வெளியேறி அதற்கு அப்பால் செல்வதற்கு அப்பகுதியின் இராணுவத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜெகத் ஜெயசூரிய இணங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்தே விடுதலைப் புலிகளிடமிருந்தும் அதற்கான உறுதிமொழியைப் பெற்றுக்கொள்ள கிறிஸ்தவ மதகுருமார் தீர்மானித்துள்ளனர்.
தென்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ மதகுருமார் விரைவில் கிளிநொச்சிக்குச் செல்வார்கள், எனினும் அதற்கான திகதிகள் எதுவும் குறிக்கப்படவில்லையென மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை அடிகளார் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார். “தென்பகுதி மதகுருமார் கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திப்பார்கள். இந்த விடயம் கிறிஸ்தவ மதகுருமார் சங்கத்தால் கையாளப்படுகிறது” என அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட்மாதம் நடைபெறவிருக்கும் வருடாந்த திருவிழாவிற்கு முன்னர் மடுமாதாவின் திருச்சொரூபம் ஆலயத்துக்கு எடுத்துவரப்படுமென விக்டர் சோசை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்பொழுது கொழும்பில் தங்கியிருக்கும் மன்னார் மாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து மடுதேவாலயத்தின் நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment