மியன்மார் சூறாவளியினால் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினி மற்றும் தொற்றுநோய் அபாயத்துக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100,000 ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நர்கிஸ் சூறாவளியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இர்ராவதி கிராமத்திற்கு உதவிகள் சென்றடையத் தொடங்கியிருக்கின்றபோதிலும், அங்கு அதிக எண்ணிக்கையான மக்கள் அவசர உதவிகளை வேண்டிநிற்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மியன்மாரின் லபுத்தா பிராந்தியத்தில் மாத்திரம் 80,000 மக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லபுத்தாவைச் சுற்றியுள்ள 63 கிராமங்கள் சூறாவளியினால் முற்றாக அழிவடைந்துள்ளதாக மாவட்ட தலைவர் தின் வின் ஏ.எப்.பி செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளிவிவகார பிரிவின் பொறுப்பதிகாரி ஷாரி வில்லாரசா, 100,000 இற்கும் மேற்பட்டோர் இந்தப் பிராந்தியத்தில் உயிரிழந்திருப்பதாகவும், 95 வீதமான கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்திருப்பதாகவும் ஏ.எப்.பியிடம் கூறியுள்ளார்.
இந்த சூறாவளியில் பாதிக்கப்பட்ட நகரமான லம்புத்தாவிலுள்ள மக்கள் மிகவும் களைத்து போயுள்ளதாகவும், உணவின்றி தவிக்கும் மக்கள் ஓரிடத்தில் சேர்வதைக் காணக் கூடியதாக இருக்கிறது என்றும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமன்றி, அந்தப் பகுதியில் மனித மற்றும் மிருகங்களின் சடலங்களிலிருந்து துர்வாடை வீசுவதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நிவாரணப் பணிகளில் நெருக்கடிகள்
மியன்மாரின் நிவாரணப் பணிகள் தொடர்பில் வொஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமெரிக்க வெளிவிவவகாரப் பிரிவின் பொறுப்பதிகாரி, மியன்மார் மக்கள் உண்மையான அபாயத்துக்கு முகங்கொடுத்திருப்பதாகவும், சுத்தமான நீர் மற்றும் உணவுப் பொருட்கள் உடனடியாக அம்மக்களைச் சென்றடைய வேண்டியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
உலகின் வறிய நாடுகளில் ஒன்றான மியன்மார் தற்போது இக்கட்டான காலகட்டத்தில் இருப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
மியன்மார் மக்களுக்கு உடனடியாக வெளிநாட்டு உதவிகள் தேவைப்படுவதாக மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கி கூறியிருக்கின்றபோதிலும், மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் வெளிநாட்டு உதவிகள் குறித்து போதிய அக்கறையற்றிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளை மேற்கொள்ள முன்வரும் வெளிநாட்டு உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இதுவரை மியன்மார் அரசாங்கம் விசா வழங்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
"இது ஒன்றும் அரசியல் விடயமல்ல, இது பாரிய மனிதாபிமானப் பிரச்சினை" என அமெரிக்க இராஜாங்க செயலாளர் கொண்டலீசா ரைஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறு தொகை அதிகாரிகளுடன் கூடிய ஐக்கிய நாடுகளின் விமானம் ஒன்று மியன்மாரில் தரையிறங்க அந்நாட்டு இராணுவத் தளபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
இருந்த போதிலும் மீட்புப் பணியில் ஈடுபடவிருக்கும் சர்வதேச பணியாளர்களுக்கு இன்னமும் மியன்மார் அரசாங்கம் குறிப்பிடத்தக்க அளவில் விசா வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, அங்கு உதவிப் பணிகளை மேற்கொள்ள வெளிநாட்டு பணியாளர்களுக்கு அனுமதியளிப்பதற்கு மியன்மார் அரசின் விருப்பமின்மை குறித்து ஏற்பட்ட பொறுமையின்மையை அடுத்து இவ்விடயத்தில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை உடனடியாக தலையிட வேண்டும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
தமது எல்லைகளை திறந்துவிட மியன்மார் மறுத்தால், தமது மக்களை பாதுகாக்கும் பொருட்டு அவ்வாறு செய்ய மியன்மாரை நிர்ப்பந்திக்கும் ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை எடுக்க வேண்டும் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பெர்ணார்ட் குஷெனர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மணிக்கு 120 மைல் வேகத்தில் மியன்மாரைத் நர்கிஸ் சூறாவளி தாக்கியது.
இந்த சூறாவளியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23,000 எனவும் 42,000 பேரைக் காணவில்லை எனவும் நேற்று புதன்கிழமை மியன்மார் அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே, இன்று வியாழக்கிழமை ஐ.நா உயரதிகாரிகள் உயரிழந்தோரின் எண்ணிக்கை 100,000 ஆக அதிகரித்திருப்பதாக அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment