மியன்மாரில் கடந்த சனிக்கிழமை வீசிய சூறாவளியில் 15,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சனிக்கிழமை மியன்மாரைத் தாக்கிய 'நர்கீஸ்' சூறாவளியில் 15,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர் எனவும், இன்னும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் எனவும் மியன்மாரின் வெளிவிவகார அமைச்சர் நயான் வின் தெரிவித்துள்ளார்.
"எமது மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள், எமக்கான உதவிகளை வரவேற்கிறோம்" எனவும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளோர்.
வெளிவிவகார அமைச்சரின் இந்த வேண்டுகோளையடுத்து, ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் மில்லியன் கணக்கான டொலர் உதவியை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் 3 மில்லியன் டொலர்களையும், அமெரிக்கா 250,000 டொலர்களையும் உடனடி உதவியாக வழங்கியுள்ளன.
மியன்மாரின் முன்னைய தலைநகரும், முக்கிய நகரங்களில் ஒன்றுமான யங்கூனிலும், ஐராவதி பிரதேசத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கானோர் காணாமல்போயுள்ளனர்.
மணிக்கு 190கிலோமீற்றர் வேகத்தில் வீசிய நர்கீஸ் சூறாவளி காரணமாக வீடுகளும், கட்டடங்களும், இடிந்து வீழ்ந்துள்ளதுடன், வீதிகளில் மரங்கள் வீழ்ந்துகிடப்பதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளி காரணமாக மியன்மாரின் உணவு விநியோகமும், அரசி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக மியன்மாரின் இலங்கைக்கான அரசி ஏற்றுமதியும் பாதிப்படையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
1991 ஆம் ஆண்டு பங்காளாதேஷைத் தாக்கிய சூறாவளியில் 143,000 பேர் உயிரிழந்ததன் பின்னர், ஆசியாவில் அதிகமானோரைப் பலி கொண்ட சூறாவளியாக மியன்மாரைத் தாக்கிய நர்கீஸ் சூறாவளி கருதப்படுகிறது.
No comments:
Post a Comment