Saturday, 3 May 2008

2 மாதங்களில் 3 கப்பல் ஆயுதங்களை விடுதலைப் புலிகள் தரையிறக்கி உள்ளனர்: "லக்பிம"


வடபகுதியில் 3 கப்பல் ஆயுதங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த 2 மாதங்களில் தரையிறக்கி உள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

அண்மையில் மணலாறு பகுதியில் நடைபெற்ற தொடர்ச்சியான எறிகணை வீச்சுக்கள் விடுதலைப் புலிகள் புதிதாக பெரும் தொகையில் எறிகணைகளை தருவித்துள்ளனர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீர்ந்து வரும் தமது எறிகணைகளின் கையிருப்பை அவர்கள் ஈடுசெய்து வருகின்றனர்.

அண்மையில் அரசின் புலனாய்வு அமைப்பு தெரிவித்த தகவல்கள் தென்னிலங்கை மக்களின் நம்பிக்கையினை சிதறடித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் பல கப்பல்களை கடற்படையினர் அழித்ததனால் அவர்களுக்கான விநியோகங்கள் தடைப்பட்டுள்ளதாக மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் புலனாய்வுத்துறையின் தகவல்கள் மறுதலையானவை.

அதாவது, கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து மார்ச் வரையில் மூன்று ஆயுதக்கப்பல்களை விடுதலைப் புலிகள் தருவித்துள்ளதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

மார்ச் 12 ஆம் நாள் விடுதலைப் புலிகள் வன்னிக்கு ஒரு ஆயுதக்கப்பலை தருவித்துள்ளதாகவும் படையினரின் புலனாய்வுத்துறை தேசிய பாதுகாப்புச் சபையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

இதனிடையே, பெப்ரவரி மாதம் 16 மற்றும் 17 ஆம் நாட்களில் விடுதலைப் புலிகள் 2 கப்பல்களை தருவித்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆழ்கடலில் நங்கூரமிட்டிருந்த இந்தக் கப்பல்களில் இருந்து றோலர்கள் மூலம் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை வடக்கு - கிழக்கு கடல் பகுதிகளான சாலை, முல்லைத்தீவு, வெற்றிலைக்கேணி பகுதிகளில் தரையிறக்கி உள்ளனர்.

இந்த அறிக்கைகள் தொடர்பான சந்தேகங்கள் அண்மையில் நடைபெற்ற சமர்களில் தெளிவாகியுள்ளது.

கடந்த 2 வாரங்களில் விடுதலைப் புலிகள் அதிகளவில் எறிகணைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 23 ஆம் நாள் முகமாலையில் நடைபெற்ற சமரிலும் அவர்கள் அதிகளவில் எறிகணைகளை பயன்படுத்தியிருந்தனர்.

கடந்த வாரம் மணலாறிலும் கடுமையான எறிகணை வீச்சக்களை நடத்தியிருந்தனர்.

கடந்த பல மாதங்களில் விடுதலைப் புலிகள் அதிகளவில் எறிகணைகளைப் பயன்படுத்தவில்லை.

எனவே அவர்களின் எறிகணைகள் தீர்ந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால் தற்போது அவர்கள் அதிகளவில் எறிகணைகளைப் பயன்படுத்தி வருவது புதிதாக ஆயுதங்களை தருவித்துள்ளதையே காட்டுகின்றது.

கடந்த சனிக்கிழமை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 7 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 40 பேர் படுகாயமடைந்திருந்தனர். பெருமளவிலான எறிகணைகள் மண்கிண்டிமலைப் பகுதியை நோக்கியே ஏவப்பட்டிருந்தன.

மணலாறுப் பகுதியில் உள்ள கம்பிலிவெவ, கல்குளமா, திசபுரா, சங்கபுர, ரணபாபுர பகுதிகளில் 100-க்கும் அதிகமான எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து 100-க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. ஆண்டான்குளம், நெடுங்கேணி பகுதிகளில் இருந்தே இந்த எறிகணைகள் ஏவப்பட்டுள்ளன.

முல்லைத்தீவை நோக்கிய படையினரின் முன்நகர்வுக்கு எதிரான தாக்குதல்களை விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் சொர்ணம் வழிநடத்தி வருகின்றார்.

இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் விடுதலைப் புலிகளின் 2 வானூர்திகள் மணலாற்றில் உள்ள படை நிலைகளின் மீது 3 குண்டுகளை வீசியுள்ளன. அவற்றில் ஒரு குண்டு 22 ஆவது படையணியின் 3 ஆவது பிரிகேட் தலமையகத்திற்கு அருகில் வீழ்ந்து வெடித்துள்ளது. இராணுவத்தின் பீரங்கி மற்றும் பல்குழல் உந்துகணை செலுத்திகளை அழிக்கும் நோக்கத்துடனே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் வன்னிப்பகுதியில் மேல் எழுந்ததும் அவை வவுனியா வான்படை தளத்தில் உள்ள இந்திய தயாரிப்பான இந்திரா - II 2 D ராடார்களில் அவதானிக்கப்பட்டுள்ளது. உடனடியாக கொழும்பு உசார்படுத்தப்பட்டது.

புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட சீனத்தயாரிப்பான எஃப்-7Gs தாக்குதல் வானூர்தி விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தாக்கும் நோக்கத்துடன் வானில் எழுந்தது. இந்த வானூர்தி நான்காவது தலைமுறை ஸ்மாட் குண்டுகளை கொண்டிருப்பதுடன் இரண்டு 500 கிலோ குண்டுகளையும், 300 கி.மீ. தூரவீச்சுக் கொண்ட வானில் இருந்து வானை கண்காணிக்கும் ராடார்களை கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்தத் தடவையும் வான்புலிகள் வெற்றி பெற்றுவிட்டனர், ஐந்தாவது தடவையும் அவர்கள் தாக்குதலின் பின்னர் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளனர்.

கடந்த ஆண்டு விடுதலைப் புலிகள் கட்டுநாயக்கா வான் படைத்தளத்தை தாக்கிய பின்னர் அரசு தனது வான் எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தது.

புதிய வான்கலங்கள் வான்படையில் இணைக்கப்பட்டதுடன், ஜேவை - 11 ரக முப்பரிமான ராடார்களையும் சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்திருந்தது.

மேலும் எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளின் இரவு தாக்குதல் வலிமையையும் அதிகாரிக்கப்பட்டிருந்தது.

வான் எதிர்ப்பு துப்பாக்கிகளும் சீர் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அரசின் இந்த நவீனமயப்படுத்தல்களை பரிசோதித்து பார்க்கும் நடவடிக்கையாகவே வான்புலிகளின் தாக்குதல் அமைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: