Saturday, 3 May 2008

(2nd lead) இன்றைய குற்றப்பார்வை(03.05.2008)

கிண்ணியாவில் கொலை:

திருகோணமலை மாவட்டம் கிண்ணியாப் பகுதியில் ஒருவரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
இனம்தெரியாதவர்களால் சுடப்பட்ட இவர் கிண்ணியாப் பகுதியின் தபால் விநியோகஸ்த்தர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

வெலி ஓயாவில் கிளைமோர் தாக்கு!

கெப்பிட்டிகொல்லேவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இரண்டு படையினர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் காட்டு புளியங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஒரு அதிரப்படை சிப்பாயும், சிவில் பாதுகாப்பு சிப்பாயுமே காயமடைந்துள்ளனர். இவர்கள் மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்த போதே குண்டு வெடிக்க செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


நீதவானும் தாக்கப்பட்டார் இலங்கை களுத்துறையில்:

கொழும்பை அண்மித்த களுத்துறைப் பகுதியில் நீதிமன்ற நீதவான் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்றிரவு தனது வாகனனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த வேளை தாக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புல்மோட்டையில் கிளைமோர்த் தாக்குதல்: மின்கோபுரம் சேதம்

திருகோணமலை புல்மோட்டைப் நியூ கல்மில்லேவப் பகுதியில் இன்று இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் மின்கோபுரம் ஒன்று சேதமடைந்துள்ளது.

இன்று சனிக்கிழமை காலை 8 மணியளவில் இக்கிளைமோர்க் குண்டு வெடித்துள்ளது. இதனையடுத்து புல்மோட்டை - போகஸ்கந்த வீதி மூடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் கிளைமோர்த் தாக்குதல்

திருகோணமலை புதிய கல்மிலவௌ பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் கிளமோர் தாக்குதொலன்று இடம்பெற்றுள்ளபோதும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனத் தெரியவருகிறது.

கைதடி யுவதி வெள்ளை வானில் வந்தோரால் கொழும்பில் கடத்தல்

கைதடி மத்தியை பிறப்பிடமாகக் கொண்ட 31 வயதுடைய இளம் யுவதி ஒருவரை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளதாக அவரது தாயாரும் சகோதரனும் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடமும் கொழும்பு ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் சாவடியிலும் புகார் செய்துள்ளனர்.

கொழும்பு-13, இல.74 ஆ, கதிரேசன் வீதியில் வசித்துவந்த நடுவிலான் சரஸ்வதி என்ற இந்த யுவதி கடந்த 29 ஆம் திகதி இரவு 10 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார். இவருடன் கடத்திச் செல்லப்பட்ட இன்னொரு யுவதியான சின்னத்தம்பி கௌரி என்பவர் கொச்சிக்கடை சிவன் கோயிலுக்கு அருகில் இறக்கிவிடப்பட்டுள்ளார். சம்பவ தினம் இராணுவ சீருடையிலும் சிவில் உடையிலும் வந்த ஆயுததாரிகளும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவராலும் அடையாள அட்டையை சோதனை செய்யவேண்டும் என்று இருவரையும் வீட்டிலிருந்து வெளியே இழுத்துச் சென்று பலவந்தமாக கண்களை கட்டி வெள்ளை வானில் கடத்திச் சென்றுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட வான் சாரதியான கருணேந்திரன் கருணாகரன் கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல்போயிருப்பதாக தாயும் சகோதரியும் பிரதி அமைச்சரிடம் புகார் செய்துள்ளனர். கடத்தப்பட்ட கருணாகரன் 2001 ஆம் ஆண்டு முதல் கொழும்பில் வான் சாரதியாக வேலை செய்து வருவதாகவும் சம்பவதினம் இரவு 8.30 மணியளவில் 2 சிவில் 2 இராணுவத்தினரும் விசாரணைக்கு என்று வெள்ளை வானில் ஏற்றிச் சென்றதாகவும் கடத்தப்பட்டவரின் தாய் பிரதி அமைச்சரிடமும் மட்டக்குளி பொலிஸ் நிலையத்திலும் புகார் செய்துள்ளார்.

இவர்களது கடத்தல் தொடர்பாக ஐ.சி.ஆர்.சி., மனித உரிமைகள் ஆணைக்குழு, `காணாமற்போதல் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகள் கண்காணிக்கும் குழு' ஆகிய அமைப்புகளுக்கும் புகார் செய்யப்பட்டுள்ளது.

இவ்விருவரின் கடத்தல் தொடர்பாக உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளுடன் பிரதி அமைச்சர் தொடர்புகொண்டுள்ளார்.



No comments: