மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியில் நேற்று திங்கட்கிழமை சிறிலங்கா அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் பொதுமக்களை அடக்குவதில் கலகம் அடக்கும் காவல்துறையினர் ஈடுபட்டதுடன், மேலதிக உதவிக்காக சிறப்பு அதிரடிப்படையின் கொமோண்டோப் பிரிவினர் அழைக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்ற பகுதிக்கு வந்த அதிரடிப்படைப் பிரிவினர், அங்கு உருவான பதற்ற நிலையை அடுத்து துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர். இதில் தாயார் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இளைஞர் ஒருவர் காயமடைந்தார். இரு காவல்துறையினரும் காயமடைந்ததாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காப் படையினரை நோக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் இளைஞர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததையடுத்தே தாம் பதில் தாக்குதல் நடத்தியதாக சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மொத்தம் 25-க்கும் அதிகமான முஸ்லிம் இளைஞர்களை அதிரடிப்படை கொமோண்டோக்கள் கைது செய்து தடுத்து வைத்திருப்பதுடன், அதில் 14 இளைஞர்கள் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
படையினரால் தயாரிக்கப்பட்ட வாக்குமூலத்தில் கைதான முஸ்லிம் இளைஞர்களை கையெழுத்திடும்படி வற்புறுத்தி மேலதிக சித்திரவதைகளையும் வன்முறையையும் அதிரடிப்படையினர் செய்துள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை ஆயுதக் குழுவான பிள்ளையான் கும்பல், முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள பல்வேறு வன்முறை அட்டூழியங்களை அரச படைகள் மறைத்து வருவதுடன் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் தவறி வருகின்றனர்.
தண்ணாமுனையில் கடத்திச் செல்லப்பட்ட முஸ்லிம் இளைஞரை தேங்காய்த்தோப்புக்குள் பிள்ளையான் குழுவின் வன்முறை ஆயுதக் கும்பல் கடுமையாகத் தாக்கியதை இராணுவத்தினர் கண்டுள்ளனர். பிள்ளையான் குழுவினர் இந்த இளைஞரை கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கிய பின்னர் விடுவித்துள்ளனர். ஆனால் அரச படைகள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிள்ளையான் குழுவினரின் கொம்மாந்துறை முகாமில் இருந்து இரு முஸ்லிம் வர்த்தகர்களை காவல்துறையினர் மீட்டனர். கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட இந்த வர்த்தகர்கள் தொடர்பாக, பிள்ளையான் குழு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க படையினர் முயற்சிக்கவில்லை.
ஏறாவூர் பிரிவில் உள்ள வந்தாறுமுலையில் வீதியில் வேகமாக வாகனத்தை ஓட்டிச்சென்ற 16 வயதுள்ள பிள்ளையான் குழு இளைஞரின் வாகனம் பாதை விலகியதில் பொதுமகன் ஒருவர் காயமடைந்ததுடன், வாகன ஓட்டுநரும் காயமடைந்தார்.
காயமடைந்த பொதுமகன் 29 வயதான ரி.சிவநேசன் என்றும், பிள்ளையான் குழுவால் கட்டாயப் பயிற்சிக்கு பிடித்துச் செல்லப்பட்ட 16 வயதான இளைஞன் என்.கண்ணன் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏறாவூர் பகுதி எங்கும் பதற்றம் நிலவுவதால் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment