Tuesday, 27 May 2008

எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து புறக்கோட்டையில் மாண்டுவண்டி ஊர்வலம்


எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருக்கும் மாண்டுவண்டி ஊர்வலம் புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்றது


ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் 13வது தடவையாக எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, இதனால் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மோசமான முறையில் எரிபொருள்களின் விலைகள் அதிகரித்திருப்பது இதுவே முதற்தடவையென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக கூறியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து 2 ½ வருடங்களுக்குள் 13 தடவைகள் எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுவிட்டன. 13 என்பது இராசியற்ற இலக்கம். எனவே, மேலும் பல பாதிப்புக்களை மக்கள் எதிர்கொள்ள நேரிடலாம் என அவர் இன்று த நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.

உலக சந்தையில் எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கும்போது எரிபொருள்களின் விலைகளை அதிகரிப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் 2 ½ வருட ஆட்சிக்காலத்தில் எரிபொருள்களின் விலைகள் 7 தடவைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. எனினும், 2 ரூபா அல்லது 2.50 ரூபாவாலேயே அதிகரிக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பெருந்தொகையான அமைச்சர்களுக்கான செலவீனங்கள், ரயில்வே, போக்குவரத்துக் கழகம், பாதுகாப்புப் படைகள் போன்றவற்றின் எரிபொருள் பாவனைக்கான பணம் செலுத்தப்படாமை போன்றவை எரிபொருள்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கத்தை இட்டுச்சென்றிருப்பதாக கயந்த கருணாதிலக கூறினார்.

ஈரான் ஜனாதிபதியை இலங்கைக்கு அழைத்து அதன்மூலம் குறைந்தவிலையில் எரிபொருள்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்கம் பிரசாரம் செய்தது. எனினும், எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. 2006ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் எரிபொருள்களுக்கு மானியம் வழங்கப்படவில்லை என இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் குறிப்பிட்டார்.

மண்ணெண்ணையின் விலை அதிகரிப்பால் கிராமப் பகுதிகளிலுள்ள மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன், பேரூந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதால் சாதாரண மக்கள் அதிகமாகக் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக மேலும் கூறினார்.

இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருக்கும் மாண்டுவண்டி ஊர்வலம் புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்றது

No comments: