ஐக்கிய அரபு இராச்சியத்தின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான அல்-குரைர் குழுமம் இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தில் மா ஆலை ஒன்றை நிறுவுவதற்காக 56 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்திய மேற்படி நிறுவனம், இது இலங்கையில் தமது நிறுவனத்தின் முதலும் இறுதியுமான முதலீடு அல்ல எனவும், தொடர்ந்தும் தாம் பல்வேறு துறைகளில், பல்வேறு பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பிரிமா நிறுவனத்தின் ஏகபோக உரிமைக்கு போட்டியாக செவன்ஸ்டார் என்ற பெயரில் கோதுமை மா எதிர்வரும் ஜூன் மாதம் இரண்டாம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
செரண்டிப் மா ஆலை இந்த கோதுமை மாவை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. புதிய கோதுமை மா தற்போது சந்தையில் உள்ள கோதுமை மாவின் விலைக்கே விற்பனை செய்யப்படவுள்ளதுடன் எதிர்காலத்தில் விலையை குறைப்பது குறித்து ஆராயவுள்ளதாக நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சதாத் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மொத்த மா தேவையில் 33 வீதத்தை தமது நிறுவனம் பூர்த்தி செய்யும் என குரைர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அல் குரைர் குழுமத்தினால், இலங்கையில் நிறுவப்பட்டுள்ள 'செரண்டிப் மா ஆலை' மூலம் 'செவன் ஸ்டார்' எனப் பெயரிடப்பட்ட மா, சந்தையில் எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி முதல் விற்பனைக்கு விடப்படவுள்ளது.
செரண்டிப் மா ஆலையின் தலைவர் மஹேந்திர அமரசூரிய, இந்த புதிய மா ஆலையின் மூலம் நாளொன்றுக்கு 1000 மெற்றிக் தொன் மாவினை உற்பத்தி செய்ய முடியும் எனவும் அடுத்த 2 வருட காலத்திற்குள் அதனை 2000 மெற்றிக் தொன் ஆக உயர்த்த முடியம் எனவும் குறிப்பிட்டார்.
அதற்குத் தேவையான தகுதிவாய்ந்த தொழிலாளர்களும், சந்தைப்படுத்தல் அதிகாரிகளும் தமது நிறுவனத்தில் தொழில்புரிவதாகவும், நுகர்வோருக்கு தரமான தயாரிப்பை வழங்குவதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இங்கு கருத்து வெளியிட்ட குரைர் குழுமத்தின் தலைவர் அல் குரைர், சர்வதேச சந்தையில் மாவுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை எனவும், தமது நிறுவனம் பல நாடுகளில் மா விநியோகத்தை மேற்கொள்வதாகவும் அவ்வாறான நாடுகளில் மாவுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இலங்கையின் கோதுமை மா உற்பத்திக்கான செலவினம் 15 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மஹிந்த சிந்தனையின் கீழ் விவசாய உற்பத்திகளுக்கு ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டதன் காரணமாக ஒன்றரை வருட காலத்துக்குள் செலவினத்தை 15 வீதத்தினால் குறைக்கமுடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment