Tuesday, 27 May 2008

உடன்படிக்கை என்ற பேரில் நாட்டைக் கைப்பற்றும் சூழ்ச்சித் திட்டத்தினை அரங்கேற்ற இந்தியா முயற்சி - விமல் வீரவன்ச

இலங்கை இந்தியா இணைந்த பொருளாதார உடன்படிக்கையின் மூலம் நாட்டைக் கைப்பற்றும் சூழ்ச்சித் திட்டம் ஒன்றை அரங்கேற்றுவதற்கு இந்திய அரசாங்கம் முனைந்து வருகின்றது. அண்டை நாடு, சகோதர நாடு என்ற அடிப்படையில் இந்தியாவை நோக்கினாலும் கூட எமது நாட்டுக்கு இழைக்கப்படும் தீங்கினைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

எரிபொருளின் திடீர் விலையேற்றம் நாட்டு மக்களை வெகுவாகப் பாதித்திருக்கும் நிலையில் குறைந்த வருமானம் பெறுவோரைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு மானியமொன்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தேசிய சுதந்திர முன்னணியின் முதலாவது செய்தியாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே விமல் வீரவன்ச எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் ‘த நேசன்’ பிரதி ஆசிரியர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாலேயே அரச சார்பற்ற நிறுவனங்கள் இதில் தலையிடுகின்றன. அரசாங்கம் உறுதியான செயற்பாடுகளை முன்னெடுத்து நாசகாரத் திட்டங்களை இல்லாதெõழிக்க வேண்டும்.

இன்று உலக சந்தையைக் காரணம் காட்டி எரிபொருளின் விலையை அதிகரித்து அந்தச் சுமையை மக்களின் தலையில் ஏற்றி வைத்துள்ளது. சகல பொருளாதார விடயங்களிலும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் நிலைமைகளை சிந்தித்து, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். எரிபொருள் விடயத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு மானியம் வழங்குவதன் மூலம் அவர்களின் பொருளாதாரச் சுமையை ஓரளவுக்குக் குறைக்க முடியும்.

நூற்றுக்கணக்கான அமைச்சர்கள், அரச அதிகாரிகளின் எரிபொருள் பாவனைச் செலவும் மக்களின் சுமைகளோடு சேர்க்கப்பட்டு வருகின்றது. எனவே, அமைச்சர்களின் எண்ணிக்கைய குறைத்துக் கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க முடியும்.

நூற்றுக்கணக்கான அமைச்சர்களின் வீண் விரயம் சேமிக்கப்படுவதற்கான ஒரே வழி அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மட்டுமேயாகும். இது இப்படி இருக்க, இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் இலங்கையுடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. பொருளாதார விடயத்தில் எமது நாட்டுக்கு முன்னேற்றம் ஏற்படுவதில் மகிழ்ச்சி என்றாலும் இணைந்த பொருளாதார உடன்படிக்கை எனும் போது அதில் உள்நோக்கம் எதுவும் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில், இவ்வாறான உடன்படிக்கைகளின் மூலம் எமது நாட்டு வளங்கள் சூறையாடப்பட்டுவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக செயற்படுகின்றோம். சில வேளைகளில் இவ் உடன்படிக்கையின் மூலம் இந்திய அரசாங்கம் நாட்டையே கைப்பற்றி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே, இலங்கை இந்தியா இணைந்த பொருளாதார உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு முன்னதாக அந்த உடன்படிக்கை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்

No comments: