இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழ் நாட்டு முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் 28,500 பேருக்கு பிரஜாவுரிமை வழங்குவது தொடர்பான சட்டமூலத்தில் விரைவில் மாற்றம் ஏற்படுத்தப்படுமென பாராளுமன்றத் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
பிரஜாவுரிமை வழங்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டு அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணப் பொருள்களை இலங்கை அகதிகள் பெற்றுக்கொள்ள முடியுமென பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
“பாராளுமன்றத் தெரிவுக்குழுவினரை கடந்த ஏப்பிரல் 21ஆம் திகதி சந்தித்த பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவது தொடர்பான சட்டமூலத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கும் எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் இருப்பதாக நான் கருதவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது” என சந்திரசேகரன் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
2003ஆம் ஆண்டின் 35ஆம் இலக்கச் சட்டமூலமானது தென்னிந்தியாவின் முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளுக்குப் பிரஜாவுரிமை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளபோதும், அதில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய தேவை இருப்பதாக பாராளுமன்றத் தெரிவுக்குழு கூறுகிறது.
1983ஆம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்துள்ள 80 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கை அகதிகள் தமிழகத்தின் 110 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 28,500 பேர் இலங்கையினதோ அல்லது இந்தியாவினதோ பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ளாதவர்கள். அவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்குவதற்கே பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
28,500 பேரும் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ளாததால் தமிழகத்திலுள்ள அகதிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை நிவாரணங்கள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லையென சந்திரசேகரன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment