புதிய அரசியல் கட்சியொன்று இந்த மாதம் உருவாக்கப்படுமென ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர் நந்தன குணதிலக தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விமல் வீரவனசவுடன் நேற்று வியாழக்கிழமை இரவு நடத்திய பேச்சுவார்த்தையிலேயே இதற்கான இணக்கம் காணப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஜே.வி.பி.யை விட்டுப் பிரிந்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இந்தப் புதிய கட்சி ஆரம்பிக்கப்படுமெனவும், எவரும் வந்து இணைந்துகொள்வதற்கு கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்குமெனவும் நந்தன குணதிலக தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்துக்குள் புதிய கட்சியொன்றை ஏற்படுத்துவது தொடர்பாக விமல் வீரவன்சவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது. இம்மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் புதிய கட்சியை தேர்தல் திணைக்களத்தில் பதிவுசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென நந்தன குணதிலக மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, விமல் வீரவன்ச புதிய கட்சியொன்றை ஏற்படுத்துவது பற்றி தமக்கு எந்தக் கவலையும் இல்லையெனத் தெரிவித்திருந்த ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, புதிய கட்சியில் இணைந்துகொள்பவர்களின் கட்சி உறுப்புரிமை இரத்துச்செய்யப்படுமென எச்சரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment