உள்நாட்டு சீமெந்து உற்பத்தியில் சிறந்த போட்டித்தன்மையை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள நிர்மாண மற்றும் பொறியியல் சேவைத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, உள்ளூரில் நிலவும் கடுமையான சீமெந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் உற்பத்திகளை மீள ஆரம்பிக்கும் நோக்கில் இந்தியாவின் பிரபல முதலீட்டு நிறுவனமான பிர்லா குழுமத்துடன் பேச்சுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செயற்படாத நிலையிலுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்கும் முகமாக இந்திய முதலீட்டுக் குழுவொன்று அப்பகுதிக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வருட முற்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற பேச்சுக்களைத் தொடர்ந்து காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு பிர்லா குழுமம் திட்டமிட்டுள்ளது.
தற்போது நிலவும் சீமெந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குதல் ஆகிய இரு முக்கிய நோக்கங்களின் அடிப்படையிலேயே இத்தொழிற்சாலையின் பணிகளை மீள ஆரம்பிப்பதில் தான் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"காங்கேசன்துறை தொழிற்சாலை மீண்டும் இயங்குமானால் பிர்லா குழுமத்தினர் சீமெந்தை குறைந்த விலையில் விற்பார்கள். அத்துடன், இத்தொழிற்சாலை மீதான பிர்லாவின் முதலீடு தற்போது 40 வீதத்திலிருக்கும் சீமெந்து உற்பத்தியை 80 வீதம் வரையில் அதிகரிப்பதற்கு உதவும்" எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, சீமெந்து உற்பத்தி துறையில் சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலையை தவிர்த்து சிறந்த போட்டித்தன்மையொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் விரும்புகிறதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தொழிற்சாலைப் பகுதியை பிர்லா குழுமத்தின் அதிகாரிகள் பரிசோதிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment