Friday, 2 May 2008

போர்நிறுத்தம்: இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும்: வைகோ

போர்நிறுத்தம் செய்ய இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். சென்னையை அடுத்துள்ள ஆவடியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் மே தின மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த முறை விடுதலைப் புலிகளே முன் வந்து போர் நிறுத்தம் செய்தனர். பின்னர் போர் நிறுத்தத்தை நீட்டித்தனர். இந்தநிலையில், உலக நாடுகளின் நெருக்கடியால் வேறு வழியின்றி போர் நிறுத்தத்தை இலங்கை அரசும் ஏற்றுக்கொண்டது. போர் நிறுத்தம் அமூலில் இருந்த நிலையில், இலங்கை அரசு போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக மீறி, மீண்டும் போரைத் தொடங்கியது.

இதனால் பல்லாயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். செஞ்சிலுவை சங்கம் மூலம் உணவு, மருந்து உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு செல்லக் கூட இலங்கை அரசு அனுமதிப்பதில்லை. இலங்கை விவகாரம் குறித்து இந்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தவறான தகவல்களை தெரிவிக்கின்றனர். இதன்மூலம், இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை திசை திருப்புகின்றனர்.

இலங்கையில் நடக்கும் உண்மை நிலையை அறிந்து, போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசை இந்தியா நிர்பந்திக்க வேண்டும். இலங்கையில், கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் தேர்தலை ரத்து செய்யவும் வற்புறுத்த வேண்டும்.

ஐ.நா.வின் மனித உரிமை செயற்பாடுகளை இலங்கைக்குள் நுழைய சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. மேலும், ஐ.நா.வின் கிளையை கொழும்பில் தொடங்கவும் அனுமதி கொடுக்கவில்லை. இதன் மூலம் மனித உரிமை மீறல் இலங்கையில் அப்பட்டமாக மீறப்படுகிறது என்பது உண்மையாகிறது.

இதற்கிடையே, விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்த சில நாடுகள், இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கிறது என ஐ.நா.வில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா தடுத்து நிறுத்தியதாக, இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் இந்த அணுகுமுறை மிகவும் வருந்தத்தக்கது எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.

No comments: